தொடர்ந்து அனுபவித்து வரும் துன்பங்கள், அழுத்தங்கள் ஆகியவற்றில் இருந்து விடுபடுவதற்கு இந்தியர் சிறப்புப் பணிக்குழு; ஹம்சா தலைமையேற்பார்

மலேசியாவில் இந்திய சமுதாயத்தினர் கடந்த 64 ஆண்டுகளாக அனுபவித்து வரும் துன்பங்கள், துயரங்கள், அழுத்தங்கள், ஏமாற்றங்கள் ஆகியவற்றில் இருந்து விடுபடுவதற்கு வரக்கூடிய 6 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களில் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று பெரிக்காத்தான் நேஷனல் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ ஹம்ஸா ஸைனுடின் நேற்று வலியுறுத்தினார்.

போதும்… போதும் – இதுவரை அனுபவித்த மேலும் அனுபவித்துக் கொண்டிருக்கும் துன்பங்கள் போதும்… போதும்… இந்திய சமுதாயம் இதில் இருந்து முழுமையாக விடுபட வேண்டும். இந்தியர்கள் ஒரு கௌரவமான தலைநிமிர்ந்து நிற்கக்கூடிய ஒரு நிலையை எட்ட வேண்டும் என்று மக்கள் ஓசைக்கு அளித்த ஒரு பிரத்தியேக நேர்காணலில் கூறினார்.

இதற்காக பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி இந்தியர் சிறப்புப் பணிக்குழு ஒன்றை அமைக்கிறது. இதற்குத் தாமே தலைமையேற்கவிருப்பதாக டான்ஸ்ரீ முஹிடின் யாசின் பிரதமராக இருந்தபோது அதன் உள்துறை அமைச்சராகப் பதவியேற்றிருந்த அவர் சொன்னார்.

இதன் தொடர்பிலான இந்திய அமைப்புகள், அரசியல் கட்சிகள், பொது இயக்கங்கள், அரசு சாரா இயக்கங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் நேற்றிரவு ஒரு பிரத்தியேகச் சந்திப்பு நடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.

இந்தச் சந்திப்பில் இளைஞர்களின் பங்கேற்பு உற்சாகம் அளிக்கும் வகையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்திய சமுதாயம் இந்த இளைய தலைமுறையினரின் வழியே ஒரு புதிய எழுச்சியைக் காணப்போகிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் பொதுத்தேர்தல்களில் அல்லது மாநிலத் தேர்தல்களில் வெற்றி – தோல்வியை நிர்ணயிக்கக்கூடிய ஓர் அபார ங்க்தியை இந்தியர்கள் கொண்டிருக்கின்றனர் என்பதை பெரிக்காத்தான் நேஷனல் முழுமையாக நம்புகிறது.

இந்திய சமுதாயத்தில் தலைமைத்துவ நெருக்கடிகள் இருப்பதை இந்த இளைய சமுதாயம் தெளிவாக உணர்ந்திருக்கிறது. இந்த உணர்வுக்கு மதிப்பளித்து பெரிக்காத்தான் நேஷனல் இந்தியர் சிறப்புப் பணிக்குழுவை அமைக்கிறது என்று பெர்சத்து கட்சியின் தலைமைச் செயலாளருமான அவர் குறிப்பிட்டார்.

பெர்சத்து கூட்டணியில் தற்போது பாஸ் இந்தியர் ஆதரவுப் பேரவை, கெராக்கான் கட்சியின் இந்தியர்கள், பெரிக்காத்தான் நேஷனல் ஆதரவு மன்றம் ஆகியவை இருக்கின்றன. இவை யாவும் இந்தப் புதிய சிறப்புப் பணிக்குழுவில் ஒருங்கிணைக்கப்படும் என்று அவர் மேலும் சொன்னார்.

நாடு தற்போது புதிய அரசாங்கத்தின் கீழ் மிக மோசமான நெருக்கடியை எதிர்நோக்கி இருக்கிறது. மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மக்களின் கழுத்தை நெரித்துக் கொண்டிருக்கிறது. அவர்கள் தங்களின் நிம்மதியை ஒட்டுமொத்தமாக இழந்திருக்கின்றனர்.

இவற்றில் இருந்து இவர்கள் முழுமையாக விடுபட வேண்டும். இந்தியர்கள் உயர்ந்த நிலையை எட்ட வேண்டும். சௌகரியமான சுழ்நிலையில் அவர்கள் வாழ வேண்டும். உரிய வாய்ப்புகளைப் பெற வேண்டும். இவற்றை வகுத்துச் செயல்படுவதற்காகத்தான் இந்த இந்தியர் சிறப்புப் பணிக்குழு அமைக்கப்படுகிறது.

இதே துன்பகரமான வாழ்க்கையை இந்திய சமுதாயம் தொடர்ந்து அனுபவிக்கக்கூடாது. போதும்… போதும் என்ற அளவுக்கு அவர்கள் சிரமப்பட்டு விட்டனர். வரும் மாநில 6 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களில் துணிந்து முடிவெடுக்க வேண்டிய மன உறுதியை அவர்கள் கொண்டிருக்க வேண்டும் என்று டத்தோஸ்ரீ ஸைனுடின் வலியுறுத்தினார்.

அண்மையில் மெட்ரிகுலேஷன் கல்வி வாய்ப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் 206 இந்திய மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. போதுமான தகுதிகள் இருந்தும் அவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பது நியாயமே இல்லை.

மேலும் இவ்வாண்டு மெட்ரிகுலேஷன் கல்லூரிகளில் எத்தனை இந்திய மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது என்ற முழு விவரமும் இன்றளவும் அறிவிக்கப்படவில்லை. இது ஏன் என்பது புரியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

6 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பெரிக்காத்தான் நேஷனல் வெற்றி பெற்றால் மாநில ஆட்சிக்குழுவில் இந்தியப் பிரதிநிதிகள் கண்டிப்பாக இடம்பெறுவர் என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போது தங்களுக்கு முன் இருக்கும் மிகப்பெரிய சவால்களுள் ஒன்றாக இந்தியர்கள் முழு அளவில் வெளிவந்து வாக்களிக்க வேண்டும் என்பதும் அடங்கும் என்று அவர் சொன்னார்.

பி.ஆர். ராஜன் – படம்: தி. மோகன்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here