இந்தியர்களைப் பகடைக்காயாக உருட்டி விளையாடாதீர்

பி.ஆர். ராஜன்

கோலாலம்பூர், ஜூலை 17-

மலேசிய இந்தியர்களைத் தங்களது விருப்பங்களுக்கு ஏற்ப பகடைக்காயாக உருட்டி விளையாடுவதை அரசியல்வாதிகள் நிறுத்திக்கொள்ள  வேண்டும். ஒரு ஜனநாயக நாட்டில் கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டிருக்கும் உரிமைகளின் அடிப்படையில் மலேசிய இந்தியர்கள் கௌரவமாக வாழ்ந்து வருகின்றனர்.

சில அரசியல்வாதிகள் இந்தியர் சம்பந்தப்பட்ட தமிழ்ப்பள்ளி, அரசு வேலைகள்,  அடையாள ஆவணங்கள், குடியுரிமை போன்ற விவகாரங்களில் இந்திய சமுதாயத்தைத் தரந்தாழ்த்திப் பேசி, இழிவுபடுத்துவது ஒரு வாடிக்கையான செயலாக மாறி இருக்கிறது.

இந்த அரைவேக்காட்டு அரசியல்வாதிகள் தமிழ்ப்பள்ளிகள் இந்த நாட்டில் இருப்பது குறித்து கேள்வி எழுப்புகின்றனர். வழக்கும் தொடுக்கின்றனர். கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தில் தாய்மொழிக் கல்வி உரிமையை இந்தியர்கள் பெற்றிருக்கின்றனர். இது குறித்து கேள்வி எழுப்புவதும், விமர்சிப்பதும் தர்க்கரீதியில் நிந்தனைக்குரியது என்றாலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இவ்வாறு கேள்வி எழுப்பியவர்களுக்கு எதிராக பல நூறு புகார்கள் செய்யப்பட்டிருப்பினும் கிணற்றில் போட்டக் கல்லைப்போன்று அவை நிலுவையில் கிடக்கின்றன. அதேபோன்று அண்மைக் காலமாக இந்தியர்கள் இன ரீதியில் அவமானப்படுத்தப்படுகின்றனர்; அவமதிக்கப்படுகின்றனர். ஒரு சட்டமன்ற உறுப்பினரே இந்திய சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு வேட்பாளரை இன ரீதியில் விமர்சனம் செய்து மன்னிப்புக் கேட்டிருக்கிறார்.

இந்திய சமுதாயத்தை அவமதித்து, அவதூறு செய்த பின்னர் மன்னிப்புக் கேட்பதும் வருத்தம் தெரிவிப்பதும் வாடிக்கையாக இருக்கிறது. இவர்களைப் போன்றோரின் வாயை அடைப்பதற்கு சட்ட ரீதியில் இதுவரை எவ்விதத் தண்டனையும் வழங்கப்படவில்லை. இதுவே இவர்கள் இவ்வாறு பேசுவதற்கு ஒரு துணிச்சலைத் தருவதாக உள்ளது.

தேர்தல் காலங்களில் உடன்பிறப்புகளாகப் பார்க்கப்படும் இந்தியர்கள் தேர்தல் முடிவுற்றதும் தீண்டத்தகாதவர்களாக மாறி விடுகின்றனர்.  நாடு சுதந்திரம் அடைந்து 66 ஆண்டுகளை எட்டி விட்டது. ஆனால் இந்த நாட்டின் இன்றைய இந்த வளர்ச்சிக்குக் கடுமையாக உழைத்து தேகம் தேய்ந்து ஓடாகி கேள்விக்குறியாக வளைந்து போயிருக்கும் இந்தியர்களை இன்னமும் கேலியும் கிண்டலும் பேசி வருவது ரணமாக வலிக்கிறது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வு காண வேண்டும். எந்தவோர் இனமும் இனி  இழிவுபடுத்தப்படக்கூடாது. இந்திய சமுதாயத்தைப் பொறுத்தவரை இந்த நாடு இன்று இந்த அளவுக்கு உருமாற்றம் பெற்றிருப்பதற்கு உழைத்திருக்கின்றனர். அதற்குரிய அங்கீகாரமும் மரியாதையும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

பகடைக்காயாக உருட்டி விளையாடியது போதும். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here