இன்று செர்காட்டில் உள்ள மஸ்ஜிட் ஜமேக் டத்தோ ஹாஜி நோ கடோட்டில் நடந்த, மறைந்த உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சரும் பூலாவ் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சலாஹுடின் அயூப்பின் இறுதிச் சடங்குகளுக்கு (ஜனாஸா தொழுகைக்கு) பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமை தாங்கினார்.
மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட 61 வயதான சலாஹுடின் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 9.23 மணிக்கு கெடா, அலோர் ஸ்டார் சுல்தான் பஹியா மருத்துவமனையில் காலமானார்.
காலை 11 மணியளவில் அங்கு வந்த அன்வார், விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு மற்றும் வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜாம்ப்ரி அப்துல் காதிர் ஆகியோருடன் சென்றார்.
மேலும் ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹபீஸ் காசி மற்றும் ஜோகூர் மாநில செயலாளர் டான்ஸ்ரீ டாக்டர் அஸ்மி ரோஹானி ஆகியோரோடு தகவல் தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சர் ஃபாஹ்மி ஃபாசில் மற்றும் உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் ஆகிய அமைச்சரவை உறுப்பினர்களும் ஜனாஸா தொழுகையில் கலந்து கொண்டனர்.
மேலும் DAP கட்சித் தலைவர் லிம் குவான் எங், பார்ட்டி அமானா நெகாரா துணைத் தலைவர் டாக்டர் சுல்கிப்ளி அஹ்மட், செனட்டர் டத்தோஸ்ரீ டாக்டர் முஜாஹிட் யூசோப் ராவா மற்றும் ஜோகூர் பாஸ் கமிஷனர் அப்துல்லா ஹுசின் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் இறுதி அஞ்சலி செலுத்த வந்திருந்தனர்.
செர்காட், ஜாலான் சூலோங் மையத்துக் கொல்லையில் சிம்பாங் ஜெராம் சட்டமன்ற உறுப்பினரான அவரின் நல்லுடல் இன்று அடக்கம் செய்யப்படும்.