ஜப்பானை புரட்டிப்போட்ட கானுன் சூறாவளி: ஒக்கினாவாவில் 2 இலட்சம் வீடுகளில் மின்தடை

தோக்கியோ, ஆகஸ்ட்டு 2:

கடந்த புதன்கிழமையன்று ஜப்பானின் ஒக்கினாவா மாநிலத்தை தாக்கிய கானுன் சூறவாளி காரணமாக 200,000க்கு அதிகமான வீடுகளில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது.

தற்போது கானுன் சூறாவளி, அந்நாட்டின் தென்மேற்குத் தீவுகளை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.

புயலில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், 11 பேர் காயமுற்றனர்.

மாண்டவர் இடிந்துவிழுந்த பாலத்தின்கீழ் நசுக்கப்பட்டு மாரடைப்புக்கு ஆளானதாக ஜப்பானின் தீ, பேரிடர் நிர்வாக அமைப்பு தெரிவித்தது.

மேலும் ஜப்பானின் பிரபல சுற்றுலாத்தலமான ஒக்கினாவாவில் வீடுகளிலிருந்து வெளியேறுமாறு கிட்டத்தட்ட 700,000 பேருக்கு அறிவுரை வழங்கப்பட்டிருந்ததாக ஜப்பானின் வானிலை அமைப்பு கூறியது.

பலத்த காற்றால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பல வாகனங்கள் கவிழ்ந்தது தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காட்சிகளில் தெரிந்தது. ஒக்கினாவாவின் சில இடங்களில் மணிக்கு சுமார் 200 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது.

உள்ளூர் நேரப்படி புதன்கிழமை பிற்பகல் ஒரு மணி நிலவரப்படி கிட்டத்தட்ட 210,000 வீடுகளில் மின்தடை ஏற்பட்டதாக வானிலை அமைப்பு அதன் இணையத்தளத்தில் தெரிவித்தது. இந்த எண்ணிக்கை, அந்நகரில் இருக்கும் மொத்த வீடுகளில் 34 விழுக்காடு என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here