தாப்பா நெடுஞ்சாலை ஓய்வக பெட்ரோனாஸ் எண்ணை நிலையத்தின் பெண்கள் கழிப்பறையில் அத்துமீறி பதுங்கிய ஆடவன் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

ராமேஸ்வரி ராஜா

தாப்பா, ஆக. 7 :

தாப்பா நெடுஞ்சாலை ஓய்வக பெட்ரோனாஸ் எண்ணை நிலையத்தின் பெண்கள் கழிப்பறையில் அத்துமீறி நுழைந்து பதுங்கியிருந்த ஆடவனை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று மாலை 4.50 மணியளவில் சமூக வலைத்தளங்களில் சிசிடிவி பதிவின் இது தொடர்பான காணொளி பகிரத் தொடங்கியது. சம்பவம் குறித்து 33 வயதுடைய மலாய்ப் பெண் ஒருவர் போலீஸ் நிலையத்தில் புகார் வழங்கியிருந்தார் என பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ முஹம்மட் யுஸ்ரி பின் ஹாஜி ஹசான் தெரிவித்தார்.

சந்தேக நபரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சிசிடிவி பதிவில் சந்தேக நபர் பரபரப்புடன் காணப்பட்டதுடன் பெண்கள் கழிப்பறையில் நுழைவது தெரியவருகிறது. போலீஸ் புகாரில், பெண் வழங்கிய தகவலின் அடிப்படையில் அவ்வாடவர் கழிப்பறைக்கு மேல் பகுதியில் பதுங்கியிருந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், சிசிடிவி பதிவின் உதவியுடன், சந்தேக நபர் பயன்படுத்தியது தொயோத்தா அவான்சா ரகக் கார் என்றும், அதன் அடையாள எண் மற்றும் முகவரி பூசிங், ஈப்போ வட்டாரத்தைச் சேர்ந்தது என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது என நிருபர்களுக்கு வழங்கிய அறிக்கையில் அவர் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் அபராதம் அல்லது 5 ஆண்டுகள் சிறைதண்டனை அல்லது இரண்டுமே விதிக்கக்கூடிய தண்டனையான செக்‌ஷன் 509 இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது எனவும் முஹம்மட் யுஸ்ரி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here