உலகின் மிக மாசுபட்ட நகரம் ஜகார்த்தா..!

 

ஜகார்த்தா, ஆகஸ்ட்டு 10 :

உலகின் மாசுபட்ட நகரங்களின் தரவரிசைப் பட்டியலில் இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தா முன்னிலையில் உள்ளது.

காற்றுத் தரத்தை அளவிடும் சுவிஸ் தொழில்நுட்ப நிறுவனமான ‘ஐகியூஏர்’ அந்தத் தரவரிசைப் பட்டியலை கடந்த புதன்கிழமை வெளியிட்டது.

அந்தப் பட்டியலில் மே மாதத்திலிருந்து தொடர்ந்து முதல் 10 நகரங்களில் ஒன்றாக ஜகார்த்தா வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரமான ஜகார்த்தா, ஒவ்வொரு நாளும் அதீத அளவுக்கு காற்றை மாசுபடுத்துகிறது என ‘ஐகியூஏர்’ நிறுவனம் தெரிவித்தது.

“காற்றின் தரம் இங்கு மிகவும் மோசமடைந்து வருகிறது. என் குழந்தைகளின் ஆரோக்கியத்தை இது பெரிய அளவில் பாதிக்கும் எனக் கவலையாக இருக்கிறது,” என ஜகார்த்தா குடியிருப்புவாசியான 35 வயதான ரிஸ்கி புத்ரா ராய்ட்டர்சிடம் கூறினார்.

மேலும், பல குழந்தைகள் அடிக்கடி இருமல், சளி போன்ற தொந்தரவுகளால் பாதிக்கப்படுகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

ஜகார்த்தா குடியிருப்புவாசிகள் போக்குவரத்து, தொழில்துறையிலிருந்து வரும் புகை, நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து வரும் நச்சுக் காற்று போன்றவற்றைப் பற்றி நீண்ட காலமாகப் புகார் அளித்து வருகின்றனர்.

காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குடியிருப்பாளர்களில் சிலர் 2021ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடங்கி, அதில் வெற்றியும் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“நாட்டின் தலைநகரை ஜகார்த்தாவில் இருந்து நுசந்தாராவிற்கு மாற்றுவதே இதற்கு ஒரே தீர்வு,” என இந்தோனேசிய அதிபர் விடோடோ செவ்வாய்க்கிழமை செய்தியாளர்கள் இது குறித்துக் கேட்ட கேள்விக்குப் பதில் அளிக்கும்போது தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here