ஷா ஆலம், ஆக. 10-
செந்தோசா பகுதி மக்கள் எதிர்நோக்கி வரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு வரும் 5 ஆண்டுகளில் தீர்வு காணப்படும் என அத்தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராகப் போட்டியிடும் ஜி. குணராஜ் உறுதி கூறினார்.
அத்தொகுதி மக்கள் எதிர்நோக்கி வரும் கல்வி, வறுமை நிலை, வேலை வாய்ப்பு, வெள்ளம், சாலைப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நடவடிக்கையில் தாம் இறங்கப் போவதாகவும் அவர் சொன்னார்.

அத்தொகுதி மக்கள் எதிர்நோக்கி வரும் வெள்ளப் பிரச்சினைக்கு தற்போது 80 விழுக்காடு தீர்வு காணப்பட்டு விட்டது. எஞ்சிய 20 விழுக்காட்டுப் பிரச்சினைக்கு வரும் ஐந்து ஆண்டுகளில் தீர்வு காணப்படும் என அவர் சொன்னார்.
இனி எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் அப்பகுதியில் இனி வெள்ளம் ஏற்படாது எனவும் அவர் தெரிவித்தார்.
அப்பகுதியில் சிறியதாகக் காணப்பட்ட அனைத்து கால்வாய்களும் அகலப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், வெள்ளத்தினால் பாதிக்கப் பட்ட அனைத்து சாலைகளும் செப்பணியிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அத்தொகுதியில் 4 தமிழ்ப்பள்ளிகள் உட்பட மேலும் 8 பள்ளிகள் உள்ளதால் மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தப்படும். மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த எஸ்.பி.எம். டியூஷன் உட்பட பல்வேறு வழிகாட்டிகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.
அத்தொகுதியிலுள்ள மக்களின் வறுமை நிலையைக் குறைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறிய அவர், அதில் இங்குள்ள ஆலயங்களில் அன்னதானம் அளிப்பதும் அடங்கும் என்றார்.
குறைந்த வருமானம் பெறும் தரப்பினர் சிறிய வியாபாரத்தில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்ற அவர், வேலை வாய்ப்புத் திட்டத்திற்கு இங்கு அதிகமான தொழிற்சாலைகளை அமைப்பதும் அடங்கும் என்றார்.
வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் வாக்களிப்பின்போது இந்தியர்கள் அனைவரும் வாக்களிக்க முன்வர வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
ஒற்றுமை அரசாங்கத்திற்கு இந்தியர்களின் வாக்குகள் 85 விழுக்காடு வரை உயர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
ஆறு மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்த தேர்தல் இந்திய சமுதாயத்திற்கு மிகவும் முக்கியமான தேர்தல் ஆகும்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்திற்கு இந்திய வாக்காளர்கள் முழு ஆதரவு வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.






















