பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட்டு 11:
புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ராஜிவ் ரிஷ்யகரனின் உடல் எடை குறித்து, மூடா கட்சியைச் சேர்ந்த சிலர் எள்ளி நகையாடியதை அடுத்து அக்கட்சி மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
ராஜிவுக்கு எதிராக மூடா கட்சியின் தினேஷ் ராஜும் புக்கிட் காசிங் தொகுதி வேட்பாளர் வி.கே.கே ராஜாவும் சொன்ன கருத்துகள் மூடாவின் கொள்கைகளுக்கு முரணானவை என்று அக்கட்சியின் தலைமைச் செயலாளர் அமிரா ஐஷா தெரிவித்தார்.
“மூடா கட்சியின் சார்பாக ராஜிவிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்,” என்று அமிரா தெரிவித்தார்.
தினேஷ் தெரிவித்த உடல் எடை பழிப்புக் கருத்துகளால் மூடா கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் அதிருப்தி அடைந்திருப்பதாகவும் அவருக்கு எதிராகப் புகார் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
கொள்கைகள், நடவடிக்கைகளில் கவனம் செலுத்துமாறு தமது கட்சி உறுப்பினர்களுக்கு அமிரா நினைவூட்டினார்.
மேலும் கட்சி உறுப்பினர்கள் தனிப்பட்ட தாக்குதல்களைத் தவிர்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
அத்தோடு, உடலைக் கட்டுக்கோப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பது மிகவும் அவசியம் என்று வேட்பாளர் ராஜா டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவு ராஜிவைக் குறிப்பிடும் வகையில் இருந்தது. எனவே அந்தப் பதிவை அவர் நீக்கிவிட்டார்.
ராஜிவுக்கு எதிராக பதிவிட்ட டுவிட்டர் குறித்து, தினேஷ் வியாழக்கிழமையன்று மன்னிப்பு கோரினார். மேலும் அவரது சர்ச்சைக்குரிய டுவிட்டர் பதிவை அவரும் நீக்கிவிட்டார்.
சிலாங்கூர் மாநிலத்தின் புக்கிட் காசிங் சட்டமன்றத் தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. பக்கத்தான் ஹரப்பானின் ராஜிவ் ரிஷ்யகரன், மூடாவின் ராஜா, பெரிக்காத்தான் நேஷனலின் நலன் தனபாலன் ஆகியோர் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.