அம்பாங் ஜெயா, ஆகஸ்ட்டு 17:
அம்பாங் ஜெயாவிலுள்ள ஜாலான் பூங்கா ராயா, பாண்டான் இன்டாவில் நேற்று, போலீசார் மேற்கொண்ட சாலைப்பாதுகாப்பு நடவடிக்கையில் அமைப்பை மாற்றியது மற்றும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஓட்டியதற்காக மொத்தம் 27 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அம்பாங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் (IPD) போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கப் பிரிவினால், நேற்றுக் காலை 7.30 மணி முதல் 9.30 மணி வரை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அம்பாங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் முகமட் அசாம் இஸ்மாயில் தெரிவித்தார்.
போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காத சாலைப் பயணிகளை, குறிப்பாக மோட்டார் சைக்கிள் பயன்படுத்துபவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்றும், “இது மோட்டார் சைக்கிள்கள் போன்ற இலகுரக வாகனங்களைப் பயன்படுத்துபவர்களிடையே ஏற்படும் விபத்து தொடர்நது அதிக அதிகரிப்பைக் காட்டுவதனால், அவற்றை தடுப்பதற்கான ஒரு முயற்சி என்றும் அவர் கூறினார்.
“இந்தச் செயல்பாட்டின் விளைவாக, மொத்தம் 27 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன, அதில் வெளிநாட்டினர் ஓட்டிச் சென்ற 12 மோட்டார் சைக்கிள்களும் அடங்கும் என்றும் அவர் கூறினார்.
“சம்பந்தப்பட்ட அனைத்து வாகனங்களும் சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 இன் பிரிவு 64(1) மற்றும் அதே சட்டத்தின் பிரிவு 6(4) இன் படி பறிமுதல் செய்யப்பட்டன,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
மேலும், செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாதது, தவறான பதிவு எண், வாகன கட்டமைப்புகளை மாற்றியமைத்தல், திசைகளை மீறுதல், பிரேக்குகள் சரியாக வேலை செய்யாதது மற்றும் பிற குற்றங்கள் உட்பட பல்வேறு குற்றங்களுக்காக மொத்தம் 61 சம்மன்கள் அனுப்பப்பட்டன.
“அனைத்து சாலையைப் பயனர்கள், குறிப்பாக மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள், விபத்துகளை ஏற்படுத்தக்கூடிய மற்றும் பொது ஒழுங்கை சீர்குலைக்கும் எந்தவொரு வாகனத்தின் அசல் கட்டமைப்பிலும் எந்த மாற்றத்தையும் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்,” என்று அவர் கூறினார்.