இம்பால், ஆகஸ்ட்டு 19:
இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் இரண்டு வாரங்களுக்குப் பிறகு மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.
நாகா பழங்குடியினரான தாங்குல்ஸ் ஆதிக்கம் செலுத்தும் உக்ருல் மாவட்டத்தில் உள்ள குகி தோவாய் கிராமத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை கடுமையான துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் குகி சமூகத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதுதொடர்பாக உக்ருல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கூறும்போது, “லிட்டன் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமத்திலிருந்து அதிகாலை கடுமையான துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் 24 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட மூன்று இளைஞர்கள் ஆவார்.
“சுற்றியுள்ள கிராமத்தின் வனப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டதையடுத்து மூவரின் சடலங்கள் கைப்பற்றப்பட்டன,” என்றார்.
மூவரின் சடலங்களிலும் கூர்மையான ஆயுதத்தால் குத்தப்பட்ட காயங்கள் இருந்ததாகவும் கை, கால்கள் வெட்டப்பட்ட நிலையில் அவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.