ஈப்போ: கெமோரில் உள்ள Aeon Mall Klebang நேற்று தவறான வெடிகுண்டு மிரட்டல் அழைப்பு தொடர்பாக 38 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஈப்போ மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி யஹாயா ஹாசன் கூறுகையில், உள்ளூர் ஆடவர் நேற்று இரவு 9.30 மணியளவில் தாசேக் பகுதியில் கைது செய்யப்பட்டார்.
சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் மற்றும் போலி அழைப்பைச் செய்யப் பயன்படுத்தப்பட்ட தகவல் தொடர்பு சாதனத்தின் அடிப்படையில் ஷாப்பிங் சென்டர் நிர்வாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் அழைப்பை ஏற்படுத்தியதற்கு அந்த நபர்தான் காரணம் என்று நம்பப்படுகிறது.
சந்தேக நபருக்கு எதிரான விளக்கமறியல் உத்தரவு இன்று பெறப்படும். மேலும் இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் 507ஆவது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார். இதற்கிடையில், முழு வளாகத்தையும் ஆய்வு செய்ததில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று யஹாயா கூறினார்.
வளாகம் பின்னர் பாதுகாப்பானது உறுதிப்படுத்தப்பட்டது. மேலும் அனைத்து ஊழியர்களும் இரவு 10.30 மணிக்கு கட்டிடத்திற்குள் மீண்டும் நுழைய அனுமதிக்கப்பட்டனர் என்று அவர் கூறினார். நேற்று மாலை சுமார் 5.30 மணியளவில் வெடிகுண்டு மிரட்டல் என சந்தேகிக்கப்படும் ஒரு அழைப்பை அந்த வளாகத்தில் இருந்த ஒரு தொழிலாளிக்கு வந்ததையடுத்து, ஷாப்பிங் சென்டர் வெளியேற்றப்பட்டு, செயல்பாட்டை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
பேராக் காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் யூஸ்ரி ஹாசன் பஸ்ரியை தொடர்பு கொண்டபோது, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவியுடன், வளாகத்தை ஆய்வு செய்ய ஒரு போலீஸ் குழுவை அனுப்பியதை உறுதி செய்தார்.