சரணடைந்தார் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்

அட்லாண்டா:

தேர்தல் மோசடி தொடர்பாகத் தன்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அமெரிக்க முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் 24ஆம் தேதி வியாழக்கிழமை அட்லாண்டாவின் ‘ஃபுல்டன் கவுன்டி’ சிறைச்சாலையில் சரணடைந்தார்.

பின்னர் 200,000 அமெரிக்க டாலர் பிணைத்தொகையில் அவர் விடுவிக்கப்பட்டார்.

கிட்டத்தட்ட 20 நிமிடங்களே டிரம்ப் சிறையில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. ஃபுல்டன் கவுன்டி’ சிறைச்சாலை ஆவணங்களின்படி, அவரது பதிவெண் ‘P01135809’.

தகவலறிந்து சிறைச்சாலைக்கு வெளியே டிரம்ப் ஆதரவாளர்கள் பலர் குவிந்தனர்.

சிறையில் அவரது அடையாளங்களைக் குறித்துக்கொண்ட காவல்துறை, ஆவணப் பதிவிற்காக அவரைப் புகைப்படமும் எடுத்தது. அப்படம் பின்னர் வெளியிடப்பட்டது.

குற்றவியல் வழக்கில் டிரம்ப் கைதாகி, பின் விடுவிக்கப்பட்டது கடந்த ஐந்து மாதங்களில் இது நான்காவது முறை. ஆனால், காவல்துறை அவரைப் புகைப்படம் எடுத்தது இதுவே முதன்முறை.

கடந்த 2020ஆம் ஆண்டு நடந்த ஜார்ஜியா மாநிலத் தேர்தலில் முடிவுகளை மாற்ற முயன்றதாக 77 வயது டிரம்ப்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பிணையில் வெளிவந்த பின்னர், தன்மீதான வழக்கு, ‘நீதியைக் கேலிக்கூத்தாக்கி’ இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

காவல்துறை வெளியிட்ட தன் படத்தையும் தனது இணையத்தள முகவரியையும் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்ட டிரம்ப், அதன்கீழ், “தேர்தல் குறுக்கீடு. இனி சரணடைய மாட்டேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2021 ஜனவரிக்குப் பிறகு டுவிட்டரில் அவர் பதிவிட்டது இதுவே முதன்முறை.

அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசுக் கட்சியின் வேட்பாளர் தேர்வில் தானே முன்னிலையில் இருப்பதாகக் கூறிய அவர், தமக்கெதிரான வழக்குகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும் சொன்னார்.

ஜார்ஜியா மாநிலத் தேர்தல் முடிவுகளை மாற்ற முயன்றதாக டிரம்ப் உள்ளிட்ட 19 பேர்மீது கடந்த வாரம் குற்றம் சுமத்தப்பட்டது.

வாக்கு எண்ணிக்கையின்போது ‘மேலும் 11,780 வாக்குகளைக் கண்டறியும்படி’ ஜார்ஜியத் தேர்தல் உயரதிகாரிக்கு தொலைபேசி வழியாக டிரம்ப் நெருக்குதல் அளித்ததாகக் கூறப்படுகிறது.

மொத்தம் 13 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் டிரம்ப், அவை அனைத்தையும் மறுத்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here