பெட்டாலிங் ஜெயா:
MCAஇல் உள்ள அனுபவமிக்க அரசியல்வாதிகள் இளைய தலைமுறையினருடன் தங்கள் அரசியல் ஞானத்தைப் பகிர்ந்துகொண்டு கட்சியை வழிநடத்தும் வாய்ப்பை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்று டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் தெரிவித்தார்.
MCA கட்சி தலைவருக்கான போட்டி கடுமையாக இருந்தாலும், வரவிருக்கும் கட்சித் தேர்தல்களில் கெளரவமான செயற்பாட்டினை வெளிப்படுத்தவும், நியாயமாக போட்டியிட வேண்டும் என்று வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
“இன்று ஈப்போவில் மாநில கட்சி மாநாட்டை நான் தொடங்கும் போது, ” பேராக் MCAல் இருந்து எங்கள் கட்சி பிரதிநிதிகளுடன் நேரத்தை செலவிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். எங்கள் பிரதிநிதிகள் மிகுந்த உற்சாகத்துடன் இருப்பதையும், மாநில மாநாட்டிற்கு முழுமையான ஆதரவை வழங்குவது தொடர்பில் நான் மிகுந்த மகிழ்சியடைகிறேன்.
“எங்கள் அனுபவமிக்க தலைவர்கள் இளைய தலைமுறையினருக்கு வாய்ப்பை வழங்க வேண்டும் என்பதை நான் பிரதிநிதிகளுடன் பகிர்ந்து கொண்டேன்,” என்று அவர் இன்று சனிக்கிழமை (ஆகஸ்ட் 26) வெளியிட்டுள்ள ஒரு பேஸ்புக் பதிவில் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் MCA துணைத் தலைவர் டத்தோ டாக்டர் மஹ் ஹாங் சூன், பொதுச் செயலாளர் டத்தோ சோங் சின் வூன், துணைத் தலைவர்கள் டத்தோ லிம் பான் ஹாங், டத்தோ டான் டீக் செங் மற்றும் டத்தோஸ்ரீ டி லியான் கெர் மற்றும் MCA மத்தியத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
MCA அதன் தேசிய அளவிலான கட்சித் தேர்தல்களை செப்டம்பர் 24 அன்று நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் அதற்கான வேட்புமனுத் தேதி செப்டம்பர் 11 அன்று நடைபெறும் என்றும், அக்கட்சியின் மகளிர் மற்றும் இளைஞர் அணிகளுக்கு செப்டம்பர் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.