பெங்களூரு: ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செப்.,2ல் காலை 11.50 மணிக்கு, சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்1 விண்கலம் ஏவப்படுகிறது என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. சூரியனை ஆய்வு செய்ய, ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைத்துள்ளோம். பெங்களூரில் உள்ள வான் இயற்பியல் ஆராய்ச்சி மையம், புனேயில் உள்ள வானியல் ஆராய்ச்சி மையம் ஆகியவை, இந்த விண்கல வடிவமைப்பில் முக்கிய பங்காற்றியுள்ளன.
இந்த விண்கலம், இரண்டு வாரங்களுக்கு முன், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்துக்கு கொண்டு வரப்பட்டது. இந்த விண்கலம் நான்கு மாதம் பயணித்து, பூமியிலிருந்து 15 லட்சம் கி.மீ., தொலைவில் உள்ள, ‘எல் 1’ என்ற மையப்புள்ளியில் நிலை நிறுத்தப்படும். ஆதித்யா விண்கலம், எல் 1 என்ற பகுதியிலிருந்து, சூரியனை ஆய்வு செய்யும்.இது தொடர்பாக, இஸ்ரோ இன்று(ஆகஸ்ட் 28) வெளியிட்டுள்ள அறிக்கை: சூரியனை ஆய்வு செய்யும் முதல் இந்திய விண்வெளி ஆய்வகமான ஆதித்யா எல்-1 செப்.,2ம் தேதி விண்ணில் பாய்கிறது.
செப்.,2ம் தேதி காலை 11.50 மணிக்கு ஆதித்யா விண்கலம் விண்ணில் பாய்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற்ற நிலையில் சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1 விண்கலம் இஸ்ரோவால் அனுப்பப்படுகிறது.