கலிஃபோர்னியா:
புதிதாக வெளியிடப்பட இருக்கும் ஐஃபோன் 15 கைப்பேசிகளில் சில இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாக இருக்கலாம்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐஃபோன் 15 கைப்பேசிகளை இந்தியாவிலும் இதர சில வட்டார நாடுகளிலும் விற்பனைக்கு விட ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக நம்பத்தகுந்த வடடாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அனைத்துலக விற்பனை தொடங்கப்படும் நாளிலேயே இந்தியத் தயாரிப்பு ஐஃபோன் அறிமுகம் செய்யப்பட்டால் அது வரலாற்றின் முதல் நிகழ்வாக அமையும்.
இருப்பினும், பெரும்பாலான ஐஃபோன் 15 கைப்பேசிகள் சீனாவில் இருந்து தொடர்ந்து வரும் என்றும் பெயர் குறிப்பிட விரும்பாத சிலர் ஊடகங்களிடம் கூறினர்.
ஐஃபோன் 15 என்னும் புதிய வகை கைப்பேசி கலிஃபோர்னியாவில் உள்ள ஆப்பிள் தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு அறிமுகம் செய்யத் திட்டமிடப்பட்டு இருந்தது.
அந்த வகை கைப்பேசிகளிள் இன்னும் சில நாள்களில் அல்லது சில வாரங்களில் விற்பனைக்கு வரலாம். புதிய ஐஃபோன் கைப்பேசிகள் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து 10 நாள்களில் அது விற்பனைக்கு வருவது வழக்கம்.
ஆப்பிளின் விற்பனை நிறுவனமான ஃபாக்ஸ்கான் டெக்னாலஜி குரூப்பின் தமிழ்நாட்டுத் தொழிற்சாலையில் கடந்த மாதம் ஐஃபோன் உற்பத்தி தொடங்கியது.
எதிர்பாராத தளவாட சிரமங்களால் இந்திய தயாரிப்பு ஐஃபோன் விற்பனைக்கு வருவதில் சிறிய தாமதம் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆயினும், இந்தத் தகவல் குறித்து ஆப்பிள் நிறுவனம் கருத்து எதனையும் கூறவில்லை.
இந்நிலையில் ஐஃபோன் 15 குறித்து இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் அதன் வாடிக்கையாளர்கள் ஆர்வமாகக் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். பலர் புது கைப்பேசியின் விலை எவ்வளவாக இருக்கும் என்று கேட்டுவருகின்றனர்.