தனது மனைவியை அடித்துக் கொன்றதாகக் கூறப்படும் மீனவர் ஒருவர் மீது இன்று கோல சிலாங்கூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கொலைக் குற்றம் சாட்டப்பட்டது. காஸ்மோவின் அறிக்கையின் படி டி.பாலமுருகன் 35, குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டார். இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது 30 ஆண்டுகளுக்கு குறையாத சிறைத்தண்டனை விதிக்கும்.
மரண தண்டனை விதிக்கப்படாவிட்டால், பாலமுருகன் 12 தடவைகளுக்குக் குறையாத பிரம்பு அடிக்க நேரிடும். மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர் தனது மனைவி கே கோமளா (38) என்பவரை, சிலாங்கூர் ஜெராம், ஜாலான் பாகன் சுங்கை ஜங்குட்டில் உள்ள ஒரு வீட்டில் செப்டம்பர் 2 ஆம் தேதி காலை 11 மணி முதல் மாலை 4.30 மணி வரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தடயவியல், வேதியியல் மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கைகள் உள்ளிட்ட வழக்கு தொடர்பான ஆவணங்களைத் தயாரிக்க அரசு துணை வழக்கறிஞர் அஃபிக் கிவாமுதீன் முஸ்தபா ஷக்ரி அவகாசம் கோரினார்.
பாலமுருகன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.வினேஷ், இந்த வழக்கை விரைந்து முடிக்கவும் வழக்கை விரைவில் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றவும் வலியுறுத்தினார். மாஜிஸ்திரேட் சித்தி ஹஜர் அலி, டிசம்பர் 13 ஆம் தேதி அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்தாக தெரிவித்தார்.
ஜெராமில் உள்ள அவர்களது வீட்டில் கணவனால் துன்புறுத்தலுக்கு ஆளானதாக கூறப்படும் ஒரு பெண் இறந்ததாக முன்னர் தெரிவிக்கப்பட்டது. கோல சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் ரம்லி காசா முன்பு மருத்துவப் பரிசோதனையில் அந்தப் பெண்ணின் உடல் மற்றும் கால்களில் அடிபட்டதால் காயங்கள் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.