வடக்கு அட்லாண்டிக் கடலின் நடுவே கடலின் கருந்துளை என சொல்லப்படும் பெர்முடா முக்கோணம் உள்ளது.. பூமியின் ஆழமான பகுதி என்று சொல்லப்படும் இந்த இடத்தின் மேலே செல்லும் கப்பலும் சரி, இதற்கு மேலே வானில் பறக்கும் விமானமாக இருந்தாலும் அது மர்மமான முறையில் காணாமல் போகும் கதைகளை நிறைய கேட்டிருப்போம்.
கடலில் மட்டும் இல்லாமல், நிலத்தில் கூட அப்படி ஒரு இடம் உள்ளது. தென்கிழக்கு ஐரோப்பிய நாடான ருமேனியாவில் ஹோயா பாசியு என்ற புகழ்பெற்ற காடு உள்ளது. இந்த காடு வளமான மரங்களுக்கோ, அழகான மலர்களுக்கோ, மூலிகைச் செடிகளுக்கோ புகழ் பெறவில்லை. மாறாக இந்த காட்டில் உள்ள ஒரு பகுதியில் இருந்து மக்கள், விலங்குகள் எல்லாம் காணாமல் போவதற்கு பிரபலம் ஆகியுள்ளது.
அமானுஷ்யங்கள் நிறைந்த காடான இங்கு சில வருடங்களுக்கு முன்னர் 200 ஆடுகளோடு அதை மேய்த்துக்கொண்டு போன மேய்ப்பானும் காணாமல் சென்றுள்ளனர். இவை தவிர அதை கடந்து சென்ற சிறுமி, என்று அந்த காட்டின் குறிப்பிட்ட பகுதிக்கு செல்பவர்கள் திரும்ப வந்ததே இல்லை. இன்னும் சொல்லப்போனால் அவர்கள் பற்றிய தகவல்கள் அதன் பின்னர் வந்ததே இல்லை. அதனால் தான் இடத்தின் மர்மங்கள் விளக்கமுடியாத பல கதைகளை கொண்டு விளங்குகிறது.
இங்கு காணாமல் போன மக்களும் இதே காட்டில் ஆவிகளாக சுற்றுவதாகக் கூட கதை சொல்கின்றனர் இந்த உள்ளூர் மக்கள். பேய் கதைகள் மட்டும் இல்லாமல் இங்கு வேறு சில சுவாரசிய கதைகள் கூட உள்ளது. அமெரிக்க படங்களில் எல்லாம் வேற்றுகிரகவாசி விமானத்தட்டில் வந்து இறங்குவதைக் காட்டுவார்கள் அல்லவா?
அதேபோல 20 ஆம் நூற்றாண்டில், எமில் பார்னியா என்ற இராணுவ தொழில்நுட்ப வல்லுநர், ஒரு குறிப்பிட்ட காடுகளின் மீது UFO என்று கூறக்கூடிய அடையாளம் காணப்படாத பறக்கும் பொருள் ஒன்றை புகைப்படம் எடுத்துள்ளார். அதன் பின்னர் தான் அந்த இடம் உலகம் முழுவதும் உள்ள மக்களின் கவனத்தை ஈர்த்தது. அந்த குறிப்பிட்ட இடம் இப்போது தி கிளியரிங் என்று அழைக்கப்படுகிறது.
காட்டிற்கு நடுவே நீள்வட்டமாக ஒரு இடம் வெறுமனே பொட்டலாகக் கிடக்கிறது. அதைத் தான் கிளியரிங் என்று அழைக்கின்றனர். கிளியரிங் என்பது இந்த குறிப்பிட்ட வனப்பகுதியில் எந்த செடிகளோ. மரங்களோ வளர்வதில்லையாம். வளமான காட்டிற்கு நடுவே ஒரு வெற்று நிலம் இருப்பதும் மர்மமாகவே உள்ளது.
இது தவிர, காடுகளுக்கு வருபவர்கள் லேசான பதற்றம், அமைதியின்மை முதல் கடுமையான தடிப்புகள், தலைவலி மற்றும் தீக்காயங்கள் போன்ற உடல் வெளிப்பாட்டுக் காரணங்கள் வரை பல விஷயங்களை எதிர்கொள்வதாக கூறுகின்றனர். இந்த ‘அறிகுறிகள்’ இன்னும் விசித்திரமான மற்றும் விவரிக்க முடியாத நிகழ்வுகளின் காடுகளின் வரலாற்றுப் புத்தகத்தில் இன்னும் உள்ளீடுகளாக இருக்கிறது.
ஆனால், சிலர் உண்மையில் காரணம் காட்டின் மண்ணாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள். ஆய்வுகள் மண்ணின் சில பகுதிகளில் கதிரியக்கத்தின் இயல்பான அளவை விட அதிகமாக இருப்பதைக் காட்டுகின்றன. இயற்கை யுரேனியம் இருப்பதால் அங்கு கதிரியக்க காரணத்தால் இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பதாக கூறுகின்றனர். காந்த அலைகள் இடமாகவும் இவை இருக்கலாம்.அதன் ஈர்ப்பு விசைகளால் இது போன்ற மாற்றங்கள் ஏற்படலாம் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. எது எப்படி இருந்தாலும் இந்த காடு, மர்மமான பல கதைகளை தன்னுள் புதைத்துக்கொண்டு தேடலுக்கு ஏற்ற இடமாக அமைந்துள்ளது.