கோலாலம்பூர்:
1993 – ஆம் ஆண்டு நிறுவப்பட்டு மலேசியாவைத் தலைமையகமாகக் கொண்டிருக்கும் DXN Holdings Bhd. (DXN) நிறுவனமானது Malaysia Holistic & Herbal Organisation (MHHO) எனும் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பமிட்டுள்ளது.
இதன்வழி இந்த இரண்டு நிறுவனங்களும் சைபர்ஜெயாவில் உள்ள DXN தலைமையகத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட மருத்துவ மையத்தை அமைப்பதற்கான ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பதிவு செய்திருக்கிறது. இந்த ஒருங்கிணைப்பு மருத்துவ மையமானது சீன பாரம்பரிய மருத்துவம், மலாய் பாரம்பரிய மருத்துவம், இந்தியர் பாரம்பரிய மருத்துவம், சுதேசிகள் பாரம்பரிய மருத்துவம் ஆகியவற்றை ஒன்றிணைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
DXN உலகளாவிய அளவில் மருத்துவ குணம் கொண்ட உணவு, பானங்கள் தயாரிப்பில் புகழ்பெற்று விளங்குகிறது. கானோடர்மா காளானைப் பயிரிட்டு அதிலிருந்து இந்த உணவுப் பொருட்களைத் தயாரித்து உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது. உடல் ஆரோக்கியத்திற்கும் உணவுக் கட்டுப்பாட்டு சத்துணவாகவும் அவை புகழ்பெற்றிருக்கின்றன. உலகம் முழுவதும் உள்ள பல்வேறு சுகாதார, வணிக இயக்கங்களுடன் மிகப்பெரிய இணைப்பில் DXN உள்ளது.
தரமான மேலும் புத்தாக்கம் நிறைந்த பொருட்களைத் தயாரித்து கடந்த சில ஆண்டுகளாகவே மிகப்பெரிய வளர்ச்சியை DXN பதிவு செய்திருக்கிறது. கானோடர்மா லுஸிடும் பொருட்களைத் தயாரிப்பதில் முன்னோடி நிறுவனமான இது உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 15.9 மில்லியன் உறுப்பினர்களைக் கொண்டிருக்கிறது. MHHO நிறுவனம் அல்லது சங்கம் 2006ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. மலேசியாவில் பாரம்பரிய மருந்துகளை மேம்படுத்துவதில் உதவுவதற்கு இந்த அமைப்பு பெரும் பங்காற்றி வருகிறது.
மலேசியர்களுக்கு நன்மை தரும் வகையில் நாட்டு மருந்து சிகிச்சை முறையில் உருமாற்றத்தைக் கொண்டு வந்து புதிய தோற்றத்தைத் தருவதற்குரிய வழிவகைகளை அது தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. MHHO உடன் சிறந்த ஒத்துழைப்பை அமைப்பதை பெரும் கௌரவமாகக் கருதுவதாக DXN நிறுவனரும் நிர்வாகத் தலைவருமான டத்தோ லிம் சியோ ஜின் கூறினார். DXN & MHHO இணைந்து பாரம்பரிய மருத்துவ மருந்துகளை ஒருங்கிணைத்து அமல்படுத்துவதில் கவனம் செலுத்தும் என்று அவர் தெரிவித்தார்.
நாட்டு மருந்துகளுக்கும் பாரம்பரிய மருந்துகளுக்கும் ஒரு புதிய உருமாற்றத்தைத் தரும் வகையில் சுகாதாரப் பராமரிப்பில் ஏற்பட்டிருக்கும் இடைவெளியைச் சரி செய்வதற்கு தங்களது நிறுவனங்களுக்கு இடையிலான பங்காளித்துவம் ஒரு பாலமாகத் திகழும் என்று டத்தோ லிம் மேலும் தெரிவித்தார்.