தேசிய அளவிலான கங்காரு கணிதப் போட்டி, ஆஸ்மோ மற்றும் மாவட்ட வளர்தமிழ் விழா போட்டி : சிறந்த அடைவு நிலையில் பீடோர் பனோப்டேன் தோட்டத் தமிழ்ப்பள்ளி

கங்காரு கணிதப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற ஹீமானேஷ் ரெட்டியுடன் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் சான்றிதழ் பெற்ற இதர மாணவர்கள்

ராமேஸ்வரி ராஜா

பீடோர், செப். 27 :

இங்குள்ள பனோப்டேன் தோட்டத் தமிழ்ப்பள்ளி தேசிய அளவில் தொடர்ந்து பல சாதனைகளை பதிவு செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக கங்காரு கணிதப்போட்டியில் சிறந்த அடைவுநிலையைப் பெற்றதுடன் வெள்ளிப்பதக்கத்தையும் வாகை சூடியது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என பள்ளியின் தலைமையாசிரியர் சரவணன் இராஜன் நாயுடு தெரிவித்தார்.

தேசிய அளவில் நடத்தப்பட்ட இப்போட்டியில் பனோப்டேன் தோட்டத் தமிழ்ப்பள்ளியைப் பிரதிநிதித்து 11 மாணவர்கள் கலந்து கொண்ட வேளையில் அதில் ச.ஹீமானேஸ் ரெட்டி எனும்  மாணவர்  வெள்ளி பதக்கம் வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்தார். தொடர்ந்து, லி.அபினயா, கா.லாவண்யா, இரா.ஹேமரூபன், வி.கஷ்வின், ம.சர்மதா ஆகிய  ஐந்து மாணவர்கள்  வெண்கலப் பதக்கம் வென்ற நிலையில், ஹே.பிரந்தாஷனா, லி.லிவேஷா, பு.ஜெயகார்திகேயன், ம.பவித்திரன், இரா.யுவேஷ் குமார் ஆகிய  மேலும் ஐந்து மாணவர்கள்  சிறப்புச் சான்றிதழ் பெற்றனர்.  சிறியப் பள்ளியாக இருந்தாலும் மற்றப் பள்ளிகளுக்கு ஈடாக வெற்றிகளைக் குவிப்பது எங்கள் பள்ளியின் சிறப்பு அம்சம் என்று  பெருமிதமாக அவர் கூறினார்.

மாவட்ட வளர்தமிழ் விழா கட்டுரை எழுதும் போட்டியில் இரண்டாம் நிலையை வாகை சூடிய மாணவி லாவண்யா

அதுமட்டுமின்றி, அண்மையில் நடைபெற்ற பத்தாங் பாடாங் மாவட்ட அளவிலான வளர் தமிழ் விழா போட்டியில் பீடோர் பனோப்டேன் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் ஆசிரியை பார்வதியின் பயிற்சியின் கீழ்  புதிர் போட்டி மற்றும் கட்டுரை எழுதும் போட்டியில் வெற்றி பெற்றனர். மாணவி லாவண்யா காந்தன் கட்டுரை எழுதும் போட்டியில்  இரண்டாம் நிலை வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். புதிர் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள் அபிநயா லிங்கேஸ்வரனன் நான்காம் நிலையிலும்,  மாணவன் விக்னேஸ்வரன் இராஜு ஐந்தாம் நிலையிலும் வெற்றிப் பெற்றனர். இந்த மூன்று மாணவர்களும் மாநில அளவில் நடைபெறும் வளர்தமிழ் விழா  போட்டிக்குத் தேர்வு பெற்றுள்ளனர்.

வளர்தமிழ் விழா போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்கள், பங்குபெற்ற மாணவர்களுடன் தலைமையாசிரியர் சரவணன் மற்றும் ஆசிரியர்கள்

மேலும்,  இப்பள்ளியைச்சேர்ந்த 5 ஆம் ஆண்டு மாணவர்கள் பேராக் மாநில அளவில் நடைபெற்ற ஆஸ்மோ (Asmo Maths Olympiad Competition) போட்டியில் சிறந்த அடைவு நிலையைப் பெற்றுள்ளனர். ஆசிரியர்  செல்வராணி உத்திரக்குமார் அவர்களின் பயிற்சியின் கீழ்  இந்தத் தேர்வினை எழுதிய இராகேஷ்வரன்  இராமு(Merit Award), ஹேமவர்ஷினி  காங்கர சுப்பிரமணியம்(Merit Award), ஜெயப்பிரபா  சிவராமு(Merit Award), ரஞ்சித் குமார்  அசோக் குமார் (Merit Award) மற்றும் நிஷாந்தினி  முனுசாமி(Participation Award) ஆகியோர் சிறந்த முறையில் பதிலளித்து இந்தச் சாதனையைப் புரிந்தனர் என குறிப்பிட்ட சரவணன்,   வெற்றிப் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவிக்கும் அதே வேளையில், ஒத்துழைப்பு வழங்கிய ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நன்றியைத் தெரிவிப்பதாகவும் கூறினார்.

மாணவர்களை மிளிரச் செய்யும் பனோப்டேன் தோட்டத் தமிழ்ப் பள்ளியின் ஆசிரியர்களுடன் தலைமையாசிரியர் சரவணன்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here