ஹாங்ஜோ:
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இணைய விளையாட்டுகளில் முதல் பதக்கத்தைக் கைப்பற்றிய நாடு எனும் பெருமையைப் பெற்றது தாய்லாந்து.
ஒலிம்பிக் அதிகாரிகளால் அணுக்கமாகக் கவனிக்கப்பட்ட கைப்பேசி விளையாட்டு ஒன்றில், வியட்னாமை வீழ்த்தி, தாய்லாந்து வெண்கலப் பதக்கம் வென்றது.
முன்னதாக, கடந்த 2018ஆம் ஆண்டு இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இணைய விளையாட்டுகளின் முன்னோட்டம் பார்க்கப்பட்டது.
இந்நிலையில், இம்முறை அவை முதன்முறையாக பதக்க விளையாட்டாக ஹாங்ஜோ ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சேர்க்கப்பட்டுள்ளன.
குழு, தனிநபர் என இரு பிரிவுகளிலும் சேர்த்து மொத்தம் ஏழு தங்கப் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.
சீனாவின் பெருந்தொழில்நுட்ப நிறுவனமான ‘டென்சென்ட்’ உருவாக்கிய “Arena of Valor” எனும் இணைய விளையாட்டின் ‘பிளே ஆஃப்’ சுற்றில் ஐவர் அடங்கிய தாய்லாந்துக் குழு 2-0 என்ற புள்ளிக் கணக்கில் வியட்னாம் குழுவை வீழ்த்தி, மூன்றாம் இடத்தைப்பெற்றது.