ஈப்போ:
1.5 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 26 கிலோகிராம் எடையுள்ள கெட்டமைன் வகை போதை மருந்துகளை விநியோகித்த குற்றச்சாட்டின் பேரில் மூன்று இந்திய நண்பர்கள் இன்று, ஈப்போ மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
குற்றம் சாட்டப்பட்ட எம்.தினேஷ், 21, எம்.விக்னேஸ்வரன், 25, மற்றும் எம்.தினேஷ் குமார், 26 ஆகிய மூவருக்கும் எதிரான குற்றச்சாட்டுகள், மாவட்ட நீதிமன்ற நீதிபதி எஸ் புனிதா முன்னிலையில் நீதிமன்ற மொழிபெயர்ப்பாளரால் வாசிக்கப்பட்டபோது, மூவரும் புரிந்து கொண்டதாக தலையசைத்தனர், ஆனால் வாக்குமூலம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
குற்றச்சாட்டுகளின்படி, 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தேதி இரவு 9.15 மணியளவில், ஜாலான் கோப்பெங், கம்போங் குனுங் ராப்பாட்டில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தின் வலது புறம் வெளியேறும் சாலையில் 26.18 கிலோ எடையுள்ள கெட்டமைன் வகை மருந்துகளை விநியோகம் செய்ததாக மூவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.
மூவருக்கும் எதிராக ஆபத்தான மருந்துகள் சட்டம் 1952 இன் பிரிவு 39B (1) (a) இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது மற்றும் அதே சட்டத்தின் 39B (2) இன் கீழ் தண்டிக்கப்படலாம்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை மற்றும் 12 பிரம்படிகளுக்கு குறையாத தண்டனை விதிக்கப்படலாம்.
அரசுத் தரப்பு துணை வழக்கறிஞர் நூருல் ஹிதாயு ஜகாரியாவால் இவ்வழக்கு தொடரப்பட்டது, குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் வழக்கறிஞர் ஆர் ஆர் சேகரன் ஆஜரானார்.
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை. வழக்கை மீண்டும் செவிமடுப்பதற்கு டிசம்பர் 26 தேதியை நீதிமன்றம் நிர்ணயித்தது.