பெய்ஜிங்: சீனா கடலுக்கு மேலே பாலங்களை அமைத்து அதில் புல்லட் ரயிலை இயக்கி சாதனை படைத்திருக்கிறது. இதன் மூலம் புல்லட் ரயில் அறிவியல் தொழில் நுட்பத்தில் சீனா தன்னை மீண்டும் முதலிடத்தில் நிலை நிறுத்திக்கொண்டிருக்கிறது. மனிதர்களின் கண்டுபிடிப்புகளில் ரயில்கள் என்பது மிகவும் அற்புதமான கண்டுபிடிப்பாகும். ஒரு ஊரையே நினைத்த இடத்திற்கு நினைத்த நேரத்திற்கு கொண்டு சேர்க்கும் திறன் உள்ள ஒரு வாகனம்தான் ரயில். தொடக்கத்தில் நிலக்கரி சுரங்கத்திலும், போருக்காகவும் போடப்பட்ட இந்த ரயில் பாதைகள் மெல்ல மெல்ல மக்கள் பயன்பாட்டுக்கு வந்தன.
வந்த வேகத்திலேயே புதிய புதிய அவதாரங்களை இந்த ரயில்கள் எடுத்தது. தற்போது இது புல்லட் ரயில் எனும் பரிணாமத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறது. புல்லட் ரயில் தொழில்நுட்பத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஜப்பான்தான் கோலோச்சியிருந்தது. ஆனால் தற்போது சீனா உருவாக்கியுள்ள புல்லட் ரயில்கள் ஒட்டு மொத்த உலக நாடுகளையே மெர்சலடைய வைத்துள்ளன. அந்த வகையில் நேற்று தென்கிழக்கு புஜியான் மாகாணத்தில் உள்ள முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் சேவையை சீனா தொடங்கியது. இந்த ரயில் கடலுக்கு மேலே பயணிக்கும் என்பதுதான் இதன் சிறப்பம்சம்.
தைவான் ஜலசந்தியின் மேற்கு கடற்கரையில் உள்ள புஜியன் நகரின் தலைநகர் ஃபுஜோ மற்றும் வணிக மையமான ஜியாமென் உட்பட 5 நகரங்களை இந்த ரயில் இணைக்கிறது. குறிப்பாக ஃபுஜோ-ஜியாமென் இடையே உள்ள 277 கி.மீ தொலைவை இந்த ரயில் வெறும் 55 நிமிடங்களில் கடக்கிறது. இந்த புல்லட் ரயிலின் அதிகபட்ச வேகம் 350 கி.மீ. இவ்வளவு வேகத்தில் ரயில் செல்கிறது எனில் அதற்கான பாதைகள் பலமாக இருப்பது அவசியமாகும்.
இந்த ரயில் பாதைக்கான கட்டமைப்புகளை சீனா கடந்த 2017ம் ஆண்டு தொடங்கியுள்ளது. இந்த கட்டுமானங்கள் அனைத்தும் நிலநடுக்கங்களை தாங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதால் நீண்ட காலத்திற்கு இந்த வழியாக புல்லட் ரயில் இயக்கப்படும் என்று சீன அதிகாரிகள் கூறியுள்ளனர். என்னதான் உலகின் சில நாடுகளில் இந்த புல்லட் ரயில் சேவைகள் இருந்தாலும், இந்த ரயில் தடத்தின் ஒட்டுமொத்த தூரங்களில் 3ல் 1 பங்கு சீனாவில்தான் இருக்கிறது.