கன்னட திரையுலகில் 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பிரபல நடிகர் நாகபூஷனா (37). “சங்கஷ்ட கர கணபதி” எனும் திரைப்படம் மூலம் 2018ல் திரையுலகில் அறிமுகமான நாகபூஷனா, இக்கத், படவா ராஸ்கல் மற்றும் ஹனிமூன் ஆகிய திரைப்படங்கள் மூலம் பிரபலமடைந்தார். ‘இக்கத்’ படத்திற்காக சிறந்த நடிகர் விருது வாங்கியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாகபூஷனா நேற்றிரவு 9:45 மணியளவில் பெங்களூருவின் உத்தரஹள்ளி பகுதியிலிருந்து புறநகர் பகுதியான கொனனகுன்டே எனும் இடத்திற்கு தனது காரில் சென்று கொண்டிருந்தார். கார் வசந்தபுரம் மெயின் ரோடு அருகில் வரும் போது அங்கு கிருஷ்ணா (58) மற்றும் அவரது மனைவி பிரேர்னா (48) எனும் தம்பதி நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். காரை ஓட்டி வந்த நாகபூஷனா தீடிரென கட்டுப்பாட்டை இழந்தார். இதை தொடர்ந்து நடந்து சென்ற தம்பதியர் மீது கார் மோதியது. அவர்கள் மீது மோதிய கார், அருகே இருந்த ஒரு மின்சார கம்பத்தில் மோதி நின்றது.
இந்த விபத்தினை தொடர்ந்து இருவரையும், நாகபூஷனா உடனடியாக முனைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். இருந்தும் துரதிர்ஷ்டவசமாக பிரேர்னா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். கால்கள், தலை மற்றும் வயிற்று பகுதியில் அடிபட்ட கிருஷ்ணாவிற்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து வேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனத்தை இயக்கியதற்காக நாகபூஷனா மீது குமாரசுவாமி போக்குவரத்து காவல்துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இன்று காலை அவர் கைது செய்யப்பட்டார். சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.