குனோங் சிரோ கல்லுமலையில் பாறை இடிந்து விழுந்து, 50 ஆண்டுகள் கடந்தும் வலி இன்னும் மறையவில்லை

ஈப்போ:

ம்பது ஆண்டுகளுக்கு முன்பு, 40 உயிர்களை பலிகொண்ட குனோங் சிரோ கல்லுமலையில் ஏற்பட்ட பாறை சரிவின் போது தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடுமத்தினர் இன்று அவர்களை நினைவுகூர்ந்தனர்.

இந்தக் கோரச் சம்பவம் 1973 ஆம் ஆண்டு அக்டோபர் 18 ஆம் தேதி அன்று இரவு 7 மணியளவில், நிகழ்ந்தது. இந்த சம்பவத்திலிருந்து உயிர் தப்பியவர்கள் மற்றும் மாண்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு இன்னமும் அது மறக்க முடியாத சம்பவமாகவே உள்ளது.

இப்பகுதியில் வாழ்ந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்தியர்கள். அவர்கள் தீபாவளிக்கு தயாராகிக்கொண்டிருந்தபோது ஒரு வாரத்திற்கு முன், இந்தப் பேரவலம் நிகழ்ந்தது.

இந்த சம்பவத்தில் 42 பேர் உயிருடன் புதையுண்டனர். அவர்களில் 12 சடலங்கள் மட்டுமே மீட்கப்பட்டது. எஞ்சிய 30 சடலங்கள் பாறையின் அடியில் சிக்கி மண்ணுக்குள் புதைந்தன. துரதிஷ்டவசமாக அவற்றை மீட்க முடியவில்லை.

இந்த சம்பவத்தை நினைவுகூறும் வகையில், பேராக் தேசிய ஆவணக் காப்பகத் துறை இன்று செவ்வாய்க்கிழமை (அக் 24) ஏற்பாடு செய்திருந்த நிகழ்வின் போது பல கிராமவாசிகள் நெஞ்சைப் பிளக்கும் சோகத்தை விவரித்தனர்.

இந்த நிகழ்வை மாநில மனித வளம், சுகாதாரம், இந்திய சமூக விவகாரங்கள் மற்றும் தேசிய ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ஏ. சிவநேசன் தொடங்கி வைத்தார். மேலும் இந்நிகழ்வில் தேசிய பழஞ் சுவடி காப்பாக அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர் .

மலை சரிந்து விழுந்த பகுதியில் இன்னமும் 30 பேர் புதையுண்டு இருப்பதால் அந்த இடத்தில் நினைவகம் ஒன்றை அமைக்க வேண்டும் என்பது பலரின் நீண்ட கால விருப்பம். அதற்கு, தாம் முயற்சிகள் மேற்கொண்டு சுமார் 30 ஆயிரம் வெள்ளி செலவில் நினைவகம் ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சிவநேசன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here