ஒட்டாவா: இந்தியாவுடனான கனடாவின் மோதல் போக்கு காரணமாக அங்கிருந்து இந்தியா வருபவர்களுக்கான விசா சேவை ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து ஒரு மாதத்திற்கு பின்னர் இன்று மீண்டும் இந்த சேவையை இந்திய தூதரகம் தொடங்கியுள்ளது. கடந்த ஜூன் மாதம் 8ம் தேதியன்று கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், சர்ரே நகரில் உள்ள குருத்வாரா வளாகத்தில் சீக்கிய தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இவர் மீது இந்தியாவில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இவர் காலிஸ்தான் விடுதலைக்கு செயல்பட்டதாகவும், காலிஸ்தான் புலிகள் படைக்கு ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி வழங்கியதாகவும் இந்திய உளவுத்துறை ஏற்கெனவே குற்றம்சாட்டியிருந்தது.
இது தவிர கடந்த 2007ம் ஆண்டு பஞ்சாப்பின் லூதியானா நகரில் 6 பேர் கொலைக்கு காரணமாக வெடிகுண்டு தாக்குதலிலும் இவர் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தார். நாடு முழுவதும் போலீசும், புலனாய்வு அமைப்புகளும் இவரை சல்லடை போட்டு தேடிக்கொண்டிருந்த நிலையில், கனடாவில் இவர் குடியேறினார். கொஞ்ச காலத்தில் கனடா குடியுரிமையும் இவருக்கு கிடைத்துவிட்டது. ஆனாலும் இவரை விடாது துரத்தி, தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என கனடாவுக்கு கோரிக்கை வைத்தது பஞ்சாப் போலீஸ். கனடா அசைந்துகூட கொடுக்கவில்லை.
இது நிஜ்ஜாருக்கு தோதாக அமைந்துவிட மேலும் பல குற்ற செயல்களை தொடங்கினார். இப்படி இருக்கையில்தான் தங்கள் நாட்டுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவாக செயல்படும் பிரிவினைவாத குழுக்களுக்கு எதிரான உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என களத்தில் இறங்கியது இந்தியா. இந்தியா கேட்க, கனடா மௌனம் சாதிக்க நாட்கள் சென்றுக்கொண்டிருந்தன. அப்போது எதிர்பாராத விதமாக அவர் கனடாவிலேயே அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இது குறித்து விசாரணையில் இறங்கிய கனடா உளவுத்துறை, இந்த கொலையில் இந்தியா சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டியது. இதனை அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக கூறி விமர்சித்துள்ளார்.
இந்த கொலைக்கு பின்னால் இந்தியாவின் நடவடிக்கைகள் இருப்பதற்கான உறுதியான காரணங்கள் இருக்கின்றன என்றும், இது தொடர்பான இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகரிடம் கலந்துரையாடியுள்ளதாகவும் ட்ரூடோ கூறியுள்ளார். சமீபத்தில் ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு வந்த ஜஸ்டின் ட்ரூடோ, இந்த கொலைக்கான ஆதாரங்களை பிரதமரிடம் கொடுத்ததாகவும், அவர் அதன் மீது உறுதியான நடவடிக்கை எடுக்காததால்தான் பொதுவெளியில் இந்தியா மீது குற்றச்சாட்டு வைத்ததாகவும் விளக்கமளித்தார் ட்ரூடோ. இத்துடன் நின்றுவிடாமல் கனடாவிலிருந்து இந்திய தூதர் ஒருவரையும் அவரது அரசு வெளியேற்றியது. அவ்வளவுதான், காதும் காதும் வைத்ததை போல முடிக்க வேண்டிய விஷயத்தை ஊதி பெரியதாக்கியது மட்டுமல்லாது, தங்கள் நாட்டின் அதிகாரியையே வெளியேற்றிவிட்டாயா? என கண் சிவந்தது இந்தியா.
பதிலுக்கு கனடாவின் தூதரக உயர் அதிகாரி ஒருவரையும் இங்கிருந்து இந்தியா வெளியேற்றியது. அத்துடன் நின்றுவிடாமல் 41 தூதரக அதிகாரிகளையும் தொடர்ச்சியாக கனடாவுக்கு திருப்பி அனுப்பியது. மோதல் இப்படியாக நீடிக்க அங்கிருந்து இந்தியாவுக்குள் நுழைய வழங்கப்படும் விசாவை ரத்து செய்தது இந்திய தூதரகம். இவ்வளவு நடவடிக்கைகளையும் பார்த்து மிரண்ட கனடா சமாதான பேச்சுக்கு அடி போட்டது. மேலும் விசா வழங்குவதை மீண்டும் தொடங்க வேண்டும் என வலியுறுத்த, இந்தியா தற்போது இதற்கு இசைவு தெரிவித்துள்ளது. அந்த வகையில் இன்று முதல் என்ட்ரி விசா, பிசினஸ் விசா, மெடிக்கல் விசா மற்றும் கான்பரன்ஸ் விசா உள்ளிட்டவற்றின் சேவைகள் தொடங்கப்படுகிறது.