சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் இனிப்பு வகைகள் (ஸ்வீட் பாக்ஸ்) எடுத்து செல்ல சுங்கத்துறை திடீரென தடை விதித்துள்ளது. இனிப்புகள் கசிந்து வெளியில் வடியும். அதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும். அதோடு பாதுகாப்பு காரணங்களுக்காகவும், ஸ்வீட் பாக்ஸ்கள் எடுத்துச் செல்ல தடை விதிக்கிறோம் என்று சுங்கத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.
மேலும் திருப்பதி லட்டு மற்றும் கோயில் பிரசாதங்களுக்கும் தடை விதித்துள்ளனர். சென்னையில் இருந்து தாய் ஏர்வேஸ் விமானத்தில் பாங்காக் செல்வதற்கு, கடந்த வாரம் 4 பேர் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தனர். அவர்களிடம் ஸ்வீட் பாக்ஸ்கள் இருந்தன. சுங்க அதிகாரிகள் ஸ்வீட் பாக்ஸ்களை எடுத்துச் செல்ல கூடாது என்று தடை விதித்தனர்.
எனவே, 4 பேரும், சென்னையில் இருந்து பாங்காக் செல்ல இருந்த விமான டிக்கெட்டுகளை ரத்து செய்துவிட்டு, பின்னர் மும்பையில் இருந்து பாங்காக்கிற்கு விமானத்தில் அதே ஸ்வீட் பாக்ஸ்களுடன் பயணித்ததாக கூறப்படுகிறது. இவர்கள் திரும்ப சென்னை திரும்பியபோது, ‘‘ஸ்வீட் பாக்ஸுக்கு நீங்கள் தடை என்கிறீர்கள்.
மும்பையில் எப்படி அனுமதித்தார்கள். இந்தியா முழுவதும் ஒரே சட்டம்தானே’’ என சுங்க அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். இதற்கிடையே இலங்கைக்கு செல்லும் பயணிகள், லுங்கி, நைட்டி, காட்டன் புடவைகள், வேஷ்டிகள் எடுத்துச் செல்லவும் தடை விதித்துள்ளனர்.
இதனால் பயணிகள் திருச்சி, பெங்களூரு சென்று அங்கிருந்து விமானங்களில் இலங்கை செல்கின்றனர். ஆனால் அந்த விமான நிலையங்களில், இதை எடுத்துச் செல்ல அனுமதிக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘நாங்கள் பத்திரிகை, ஊடகங்களிடம் பேச மாட்டோம். சுங்க சட்ட விதிகளின்படி செயல்படுகிறோம். விதிமுறைகளுக்கு மாறாக செயல்படவில்லை.
மற்ற விமான நிலையங்களில் எவ்வாறு அனுமதிக்கின்றனர் என்பது பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது’’ என்றனர். சுங்கத்துறை முன்னாள் அதிகாரிகள் சிலர் கூறுகையில், ‘‘ஸ்வீட்கள் எடுத்து செல்வதற்கு சுங்க சட்ட விதிகளில் எந்தவித தடையும் இல்லை. அதிலும் ஆன்மிக ரீதியான, திருப்பதி லட்டு, பண்டிகை கால ஸ்வீட்கள் போன்றவை எடுத்துச் சொல்வதை தடுப்பது சரியான செயல் அல்ல. விமான நிலையத்திற்கு மிரட்டல்கள் போன்ற அவசர காலங்களில் மட்டும், அல்வா, ஊறுகாய், ஜாம் உள்ளிட்ட திரவப் பொருட்கள் பயணிகள் எடுத்து செல்ல தடை விதிக்கப்படும்.
அதுவும் அந்த அவசர காலங்களில் மட்டுமே. விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தான் கண்காணிப்பார்கள், சுங்கத்துறையினர் அல்ல. சுங்கத்துறையினர் இவ்வாறு அளவுக்கு அதிகமாக கெடுபிடி செய்வதால் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை குறைந்து போதிய பயணிகள் இல்லாமல் விமான நிறுவனங்கள், விமானங்களை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இப் பிரச்னையை ஒன்றிய நிதி அமைச்சகம் கவனித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.