மக்களிடையே வாசிப்புக் கலாச்சாரம் குறைந்து வருவதால் இந்த ஆண்டு நாடு முழுவதும் உள்ள ஏராளமான புத்தகக் கடைகள் மூடப்பட்டுள்ளன. புத்தகக் கடைகள் மூடப்படுவது சமூகத்தில் குறிப்பாக கிராமப்புறங்களில் நீண்டகாலத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று மலேசிய புத்தக விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெய்த் தொங் நிருபர்களிடம் தெரிவித்தார்.
புத்தகக் கடைகள் தொடர்ந்து மாணவர்கள் வாசிப்புப் திறன் பெறும் அறிவுக் களஞ்சியங்களில் ஒன்றாகத் திகழ்கின்றன என்றார். பலதரப்பட்ட தொழில்நுட்பச் சாதனங்களுடன் (gajet) நேரத்தைச் செலவிட விரும்பும் போக்கால் நாடு முழுவதும் மூடப்படும் புத்தகக் கடைகளின் எண்ணிக்கை எதிர்காலத்தில் அதிகரிக்கும் என கெய்த் தொங் தெரிவித்தார்.
பல்வேறு சேவைகளை வழங்கும் இன்றைய தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கருத்தில்கொண்டு புத்தகக் கடையை மூட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது என்று பெரும்பாலான புத்தகக்கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
வித்தியாசமான அணுகுமுறையில் நடத்தப்படும் புத்தகக் கடைகளால் மட்டுமே தொடர்ந்து நீடிக்க முடிகிறது மேலும் நாடு முழுவதும் கிளைகளை அதிகரிக்க முடிகிறது. எதிர்காலத்தில் சிறிய, பழைய புத்தகக்கடைகள் வணிகம் இல்லாமல் மூடும் நிலை வரலாம்.
பள்ளிப் பொருட்களின் விற்பனை, கவர்ச்சிகரமான இருக்கைகள், பலவற்றை உள்ளடக்கிய கவர்ச்சிகரமான புத்தகக் கடையே தொடர்ந்து மக்களின் ஆர்வத்தை ஈர்க்கும். நமது நாட்டில் வாசிப்பு, கலாச்சாரம் குறைந்ததற்கான காரணிகளில் ஒன்று சமூக ஊடகங்கள்தாம் என்று மலேசிய புத்தகத் தொழில் மன்ற (எம்பிஐசி) தலைவர் கெய்த் தொங் குறிப்பிட்டார்.
மலேசியா பல்கலைக்கழகப் புத்தக அங்காடி ஏற்பாடு செய்த டிஜிட்டல் வாசிப்பு, கற்றல் கற்பித்தல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது அவர் கூறினார். ஜோகூர் மாநில பொது நூலகக் கழகத்தில் (பிபிஏஜே) ஆங்கில ஆசிரியர் சங்கம் (ஜெல்டா) டிஜிட்டல் வாசிப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதில் பேசிய அவர் உள்ளடக்கம் சுருக்கமாகவும் முழுமையடையாமல் இருந்தாலும் மக்கள் ஆன்லைனில் படிப்பதையே அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர் என்று அவர் சுட்டிக்காட்டினார்.