கோலாலம்பூர்:
மூன்று ஆண்டுகளில் வளர்ப்பு மகளை 105 முறை பாலியல் பலாத்காரம் செய்த வேலையில்லாத ஒருவருக்கு ஏற்கனவே உயர்நீதிமன்றம் விதித்த 42 ஆண்டு சிறைத்தண்டனையை, இன்று (நவம்பர் 8) மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்தது.
மேலும் 36 வயதான அந்த நபருக்கு 24 முறை பிரம்பால் அடிக்கவும் உத்தரவிடப்பட்டது.
நீதிபதிகள் டத்தோ ஹதாரியா சையத் இஸ்மாயில், டத்தோ அகமது ஜைதி இப்ராஹிம் மற்றும் டத்தோ ஆஸ்மி அரிஃபின் ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, சிறைத்தண்டனைக்கு எதிரான குறித்த நபரின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
நீதிமன்றத்தில் ஏகோபித்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி ஹதாரியா, குற்றவாளிக்கு 42 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 24 தடவை சவுக்கடி தண்டனை விதித்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதிசெய்யப்படுகிறது என்றார்.
“ஒரு தந்தை தனது சொந்த மகளையோ அல்லது வளர்ப்பு மகளையோ பாலியல் பலாத்காரம் செய்வது என்பது ஒரு முறை கூட ஏற்கவோ அல்லது மன்னிக்க முடியாத குற்றம், இருப்பினும் குற்றவாளியோ 105 முறை அப்பெண்ணை சீரழித்துள்ளார் ” என்று நீதிபதி ஹதாரியா மேல்முறையீட்டு விசாரணையின் போது கூறினார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் வேலைக்கு சென்றிருந்தபோது குற்றவாளி இந்தக் குற்றங்களைச் செய்ததாக கூறபட்டுள்ளது.
2018 இல் சிறுமிக்கு 12 வயதாக இருந்தது முதல் வருடங்களாக, சிலாங்கூரின் சுங்கை வேயில் உள்ள ஒரு வீட்டில் சிறுமியை 105 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக 105 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது. குற்றவாளி குற்றத்தை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து, ஜனவரி 27, 2021 அன்று, கிள்ளான் அமர்வு நீதிமன்றம் 1,050 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. மேலும் அந்த நபருக்கு 24 முறை ரோட்டான் அடிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் 7ஆம் தேதி, அவருக்கு செஷன்ஸ் நீதிமன்றம் வழங்கிய சிறைத் தண்டனையை 42 ஆண்டுகளாகக் குறைத்து, 24 பிரம்படிகளை கிள்ளான் உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
குற்றவாளி கிள்ளான் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுத்து மேல்முறையீடு செய்த நிலையில், இன்று மேல்முறையீட்டு நீதிமன்றம் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிச்செய்தது.