கோலா திரெங்கானு:
பெர்ஹெந்தியான் தீவில் இடிந்து விழுந்த கட்டுமானத்தில் உள்ள ரிசார்ட் கட்டிடம் 2020 இல் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (MCO) அமலிலிருந்தபோது சட்டவிரோதமாக கட்டப்பட்டது எனக் கூறப்படுகிறது.
பெசூட் மாவட்ட கவுன்சில் (MDB) தலைவர் முகமட் சுகேரி இப்ராஹிம் கூறுகையில், ஆகஸ்ட் 2021 இல் குறித்த கட்டிடத்திற்கான திட்ட அனுமதியைப் பெற ரிசார்ட் நடத்துநர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இருப்பினும், 12 செப்டம்பர் 2021 அன்று நடைபெற்ற 14வது MDB தற்காலிக மத்தியக் குழு (OSC) கூட்டத்தில், குறித்த ரிசார்ட் நிர்வாகம் நிரந்தரத் திட்டத்தைச் சமர்ப்பிக்கத் தவறியது உள்ளிட்ட பல காரணங்களுக்காக அதன் விண்ணப்பத்தை நிராகரிக்க முடிவு செய்தது.
மேலும் ரிசார்ட் நடத்துநரும் பொருளாதார திட்டமிடல் பிரிவில் (Upen) சமர்ப்பித்து கொள்கை ஒப்புதலைப் பெறத் தவறிவிட்டார் என்றும் அவர் கூறினார்.
பெர்ஹெந்தியான் தீவில் நிர்மாணிக்கப்பட்டு வந்த மூன்று மாடி கட்டிடம் நேற்று காலை இடிந்து வீழ்ந்த சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே முஹமட் சுகேரி இவ்வாறு தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில், ரிசார்ட் கட்டிடத்தின் கட்டுமானத் தொழிலாளர்கள் 6 பேர் உயிர் பிழைத்துள்ள நிலையில், மற்றொரு தொழிலாளி இடிபாட்டுக்குள் புதைந்துவிட்டதாக அஞ்சப்படுகிறது.