கூச்சிங்கில் ஆன்லைன் சூதாட்ட மையத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 26 வெளிநாட்டவர்களை போலீசார் கடந்த வாரம் நகரைச் சுற்றி நடத்தப்பட்ட மூன்று சோதனைகளில் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 23 ஆண்களும் 3 பெண்களும் 18 முதல் 33 வயதுக்குட்பட்டவர்கள் என்று சரவாக் காவல்துறைத் தலைவர் டத்தோ மஞ்சா அட்டா தெரிவித்தார். நவம்பர் 7 ஆம் தேதி இங்குள்ள லோரோங் டோகன் 3 இல் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் முதல் சோதனை நடத்தப்பட்டது.
அங்கு ஒன்பது நபர்கள் தடுத்து வைக்கப்பட்டதோடு கணினிகள் போன்ற பல்வேறு உபகரணங்கள் கைப்பற்றப்பட்டதாக அவர் கூறினார். நவம்பர் 8 அன்று ஜாலான் சஃன்னி ஹில் கார்டனில் உள்ள ஒரு குடியிருப்பில் இரண்டாவது மற்றும் மூன்றாவது சோதனையில், 17 நபர்களை போலீசார் கைது செய்தனர். சந்தேக நபர்கள் சூதாட்ட மையத்தை நடத்துபவர்கள் என்று நம்பப்படுகிறது மற்றும் அவர்கள் மாதத்திற்கு RM1,200 முதல் RM1,600 வரை சம்பாதிக்கிறார்கள்.
பரிவர்த்தனை பதிவுகளின் அடிப்படையில் இந்த மையம் ஓராண்டுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. கும்பல் மொத்த லாபமாக ஒரு மாதத்திற்கு 240,000 ரிங்கிட்டை வருமானமாக ஈட்டியது. மேலும் அந்த வளாகத்தின் உண்மையான உரிமையாளரை நாங்கள் தேடி வருகிறோம் என்று அவர் சரவாக் காவல் படைத் தலைமையகத்தில் இன்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். பொது விளையாட்டுச் சட்டம் 1953 இன் பிரிவு 4(1)(ஜி) இன் கீழ் விசாரணை ஆவணங்கள் திறக்கப்பட்டுள்ளன என்றும் வெளிநாட்டவர்கள் 14 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.