கோலாலம்பூர்:
கடந்த வெள்ளிக்கிழமை போலீசார் மேற்கொண்ட இரண்டு சோதனைகளில், இந்தோனேசிய நபர் ஒருவரின் தலைமையிலான போதைப்பொருள் கடத்தல் கும்பலை போலீசார் முறியடித்தனர்.
அவர்களிடமிருந்து 10 கிலோகிராம் சியாபு மற்றும் RM631,000 மதிப்புள்ள மூன்று கார்களையும் பறிமுதல் செய்ததாக கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர், டத்தோ அல்லாவுதீன் அப்துல் மஜிட் கூறினார்.
பொது மக்கள் அளித்த தகவலின் பேரில், இரவு 7.20 மணியளவில், கோலாலம்பூர் காவல்துறையின் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் ஜாலான் அம்பாங்கில் உள்ள ஒரு குடியிருப்பில் சோதனை மேற்கொண்டதில், RM341,000 மதிப்புள்ள போதைப் பொருட்கள் காண்டோமினியத்தின் லாபியில் கைப்பற்றப்பட்டன, அத்தோடு 26 முதல் 46 வயதுடைய ஒரு இந்தோனேசியர் உட்பட ஐந்து ஆண்கள் மற்றும் ஒரு உள்ளூர் பெண் ஆகியோர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
“அனைத்து உள்ளூர் சந்தேக நபர்களும் கடந்தகால போதைப்பொருள் மற்றும் குற்றவியல் பதிவுகளைக் கொண்டுள்ளனர், அதே நேரத்தில் மூளையாக செயற்பட்டதாக நம்பப்படும் இந்தோனேசிய நபருக்கு எந்த குற்றப் பதிவும் இல்லை”.
“சிறுநீர் பரிசோதனை முடிவுகள் அனைத்து சந்தேக நபர்களுக்கும் மெத்தம்பேட்டமைன் சாதகமாக இருந்தது கண்டறியப்பட்டது” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
கடந்த இரண்டு மாதங்களாக இந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல் கோலாலம்பூரைச் சுற்றி தீவிரமாக செயற்பட்டுவந்தது கண்டறியப்பட்டுள்ளது என்று அல்லாவுதீன் கூறினார்.
“ஆபத்தான மருந்துகள் சட்டம் 1952 இன் பிரிவு 39B இன் படி விசாரணைக்கு உதவுவதற்காக அனைத்து சந்தேக நபர்களும் நவம்பர் 24 வரை ஏழு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்,” என்று அவர் மேலும் கூறினார்.