பினாங்கு விமான நிலையத்தில் நீண்ட வரிசையில் 4 மணி நேரமாக காத்திருந்த பயணிகள்

கோலாலம்பூர்:

பினாங்கு விமான நிலையத்தின் குடிநுழைவு முகப்புகளில் மூன்று முதல் நான்கு மணி நேரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்ததால் பயணிகள் சிலர் விரக்தியடைந்தனர்.

இதனால் அவர்கள் பினாங்குத் தீவில் செலவிடுவதற்கான நேரம் குறைந்துவிடும் என்று எண்ணி வருத்தமடைந்தனர்.

கடந்த சனிக்கிழமை அரைவாசிக்கும் குறைவான குடிநுழைவு முகப்புகள் மட்டுமே செயல்பட்டதால், குடிநுழைவு நடைமுறையை நிறைவேற்ற பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் உருவானது.

அவர்களின் வரிசை வருகையாளர் கூடம் வரை நீண்டதாகவும், தங்கள் பயணப்பைகளுடன் நிறுத்திவைக்கப்பட்ட மின்படிகளில் நின்றுகொண்டிருந்த சிலர் ஒய்வெடுக்க அவற்றில் அமர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

பினாங்கு விமான நிலையத்தில் 12 குடிநுழைவு முகப்புகளும் ஞாயிற்றுக்கிழமை செயல்பட்டதால் நிலவரம் மேம்பட்டதாக சின் சியூ நாளிதழ் தெரிவித்தது.

சுங்கச் சோதனைக்குப் பிறகு தனது பயணப்பைகளைப் பெற்றுக்கொள்ள தனக்கு வெறும் 30 நிமிடங்கள் ஆனதாக பினாங்கு விமான நிலையத்திற்கு ஞாயிற்றுக்கிழமை வந்திறங்கிய பயணி ஒருவர்கூறினார்.

12 குடிநுழைவு முகப்புகளில் ஐந்து மட்டுமே சனிக்கிழமை காலை 11.40 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை செயல்பட்டதாகவும் இதனால் ஒன்பது அனைத்துலக விமானங்களில் பினாங்கு விமான நிலையத்திற்கு வந்த பயணிகள் பாதிக்கப்பட்டதாகவும் பினாங்கு சுற்றுலா, புத்தாக்கப் பொருளியல் குழுத் தலைவர் வோங் ஹான் வை ஊடகங்களிடம் தெரிவித்தார்.

சிங்கப்பூர், ஜகார்த்தா, தைப்பே உள்ளிட்ட இடங்களிலிருந்து வந்த விமானங்களும் எட்டு விமானங்களில் வெளிநாடு செல்லவிருந்த பயணிகளும் பாதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தச் சம்பவம் குறித்து பினாங்கின் குடிநுழைவுத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாக வோங் கூறினார்.

“சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து வரும் சுற்றுப்பயணிகள் டிசம்பர் 1ஆம் தேதி முதல் விசா இல்லாமல் மலேசியாவிற்குள் நுழையலாம் என அரசாங்கம் அண்மையில் அறிவித்திருந்தது.

“இதனால் மலேசியாவிற்கு அதிக எண்ணிக்கையில் பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைச் சமாளிக்க உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், குடிநுழைவு நடைமுறைகளை நிறைவேற்ற மக்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும்,” என பினாங்கு முதல்வர் சோவ் கோன் இயோவ் ஞாயிற்றுக்கிழமை கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here