குடிநுழைவைக் கடுமையாக்கும் பிரிட்டன்

லண்டன்:

வேலைக்காக சட்டப்படி பிரிட்டனுக்குள் நுழையும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க உள்ளதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே பிரிட்டனின் குடிநுழைவு கொள்கை குறித்து அந்நாட்டு மக்கள் விமர்சனம் செய்து வந்தனர். இந்நிலையில் ரி‌‌ஷி சுனக் தலைமையிலான பிரிட்டன் அரசாங்கம் டிசம்பர் 4ஆம் தேதி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

“குடிநுழைவு மிக அதிகமாக உள்ளது, அதைக் குறைக்கும் நோக்கில் இந்த அதிரடி முடிவு. மேலும் ருவாண்டாவில் இருந்து சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்தவர்களைத் திருப்பி அனுப்ப அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்று ரி‌‌ஷி சுனக் தெரிவித்தார்.

வெளிநாடுகளில் இருந்து பிரிட்டன் வரும் ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஆண்டு வருமானம் 65,000 வெள்ளியாக மாற்றப்படுகிறது. தற்போது அது 44,000 வெள்ளியாக உள்ளது. சுகாதாரம், சமூக சேவைகளில் உள்ளவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் வெளிநாட்டு சுகாதார ஊழியர்கள் அவர்களின் குடும்ப உறுப்பினர்களை பிரிட்டனுக்குள் அழைத்து வரமுடியாது. மேலும் குடும்ப உறுப்பினர்களை பிரிட்டனுக்குள் அழைத்து வரக்கூடிய ஊதிய வரம்பும் அதிகரிக்கப்படுகிறது.

2022ஆம் ஆண்டில் மட்டும் பிரிட்டனுக்கு குடிபெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 745,000. அது முன்னெப்போதும் இல்லாத அளவு அதிகம். அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியா, சீனா, நைஜீரியா நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

அந்த எண்ணிக்கையை இனி ஆண்டுக்கு 300,000ஆக குறைக்க பிரிட்டன் முடிவெடுத்துள்ளது.

பிரிட்டனில் 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடக்க உள்ளது. அதை முன்னிட்டு பிரிட்டன் மக்களிடம் தமது செல்வாக்கை அதிகரிக்கும் நோக்கில் பிரதமர் ரி‌ஷி இந்த நடவடிக்கை எடுத்ததாக அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

இந்தப் புதிய அறிவிப்புக்கு வர்த்தகம் மற்றும் தொழில் துறையினரிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தனியார் நிறுவனங்கள், மருத்துவச் சேவைகளில் உள்ள நிறுவனங்கள் ஊழியர் பற்றாக்குறை போன்ற சவால்களை எதிர்நோக்கக்கூடும் மேலும் இது வேலைப்பளுவை அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here