கோலாலம்பூர்:
ஏர்ஏஷியா விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டோனி ஃபெர்னாண்டஸ், இந்த வாரத் தொடக்கத்தில் தங்கள் விமானத்தில் இருக்கை கிடைக்க வில்லை என்றும் அதனால் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் தாம் பயணம் செய்ததாகவும் கூறியுள்ளார்.
டிசம்பர் 5ஆம் தேதி இன்ஸ்டகிராமில் அவர் அவ்வாறு பதிவிட்டுள்ளார். அவரது பதிவுக்குக் கிட்டத்தட்ட 7,000 விருப்பக் குறியீடுகள் கிட்டியுள்ளன. கோலாலம்பூரி லிருந்து சிங்கப்பூர் வந்த எஸ்கியூ113 விமானத்தில் தாம் அமர்ந்திருந்த இருக்கையின் படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் இதுகுறித்து மாறுபட்ட கருத்துகள் வெளியாகியுள்ளன.
தனியார் விமான நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி ஒருவர் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் இருக்கைப் பதிவுகளில் மாற்றம் செய்யாமல், வேறொரு நிறுவன விமானத்தில் பயணம் செய்தது பாராட்டத்தக்கது என்று சிலர் கூறியுள்ளனர்.
“பொய் சொல்லாதீர்கள் டோனி. நீங்கள் ஏர்ஏஷியாவில் பயணம் செய்ய விரும்ப வில்லை,” என்று இணையவாசி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
போட்டி நிறுவனத்திற்கு அங்கீகாரம் தருகிறாரா தமது நிறுவன வெற்றியைப் பறைசாற்றுகிறாரா என்று சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.