அன்வாரின் மிகப்பெரிய சாதனை: சுதந்திரத்திற்குப் பின்னர் தமிழர் இடம்பெறாத முதலாவது அமைச்சரவை

கோலாலம்பூர் – ஒற்றுமை அரசாங்கத்தின் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மலேசிய இந்தியர்களுக்குத் தந்து வரும் ஏமாற்றங்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. நேற்று அவர் அமைச்சரவை மாற்றத்தில் நாட்டின் சுதந்திரத்திற்குப் பின்னர் தமிழ் பேசும் ஒரு தமிழர் இடம்பெறாத முதலாவது அமைச்சரவையை அறிவித்து மிகப்பெரிய ஒரு சாதனையைப் பதிவு செய்திருக்கிறார். 2022ஆம் ஆண்டு நடைபெற்ற 15ஆவது பொதுத்தேர்தலுக்குப் பின்னர் தனித்த பெரும்பான்மை இல்லாத நிலையில் பாரிசான் நேஷனல் உட்பட 18 கட்சிகளின் ஆதரவோடு ஒற்றுமை அரசாங்கத்தை அமைத்து நாட்டின் 10ஆவது பிரதமராக அவர் பொறுப்பேற்றார்.

ஒற்றுமை அரசாங்கத்தின் 5 ஆண்டு தவணைக் காலத்தை முழுமையாக நிறைவு செய்யும் ஒரே தூரநோக்குச் சிந்தனையோடு மற்ற இனத்தவர்களை அரவணைத்துக் கொண்டிருக்கும் அன்வார், இந்திய சமுதாயத்தைக் கைவிட்டிருக்கிறார் என்பது நிதர்சனமான உண்மை. அவரின் முதலாவது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த மனிதவள அமைச்சர் வ.சிவகுமார் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். அவருக்குப் பதிலாக இரண்டு இந்தியத் துணை அமைச்சர்களை நியமனம் செய்திருக்கிறார்.

சுங்கை பூலோ பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன், ஈப்போ பாராட் ஜசெக  நாடாளுமன்ற உறுப்பினர் எம். குலசேகரன் ஆகிய இருவரும் அமைச்சரவை மாற்றத்தில் துணை அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டிருக்கின்றனர். இவ்விருவருள் குலசெகரன் துன் டாக்டர் மகாதீர் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி அரசாங்கத்தில் முழு மனிதவள அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்வாரின் புதிய அமைச்சரவை மாற்றத்தில் அவர் துணை அமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டிருப்பது ஒரு மிகப்பெரிய சரிவு என்று இந்திய சமுதாய மக்கள் வர்ணித்து வருகின்றனர். இந்தப் புதிய அமைச்சரவை மாற்றத்தில் முழு அமைச்சர்களின் எண்ணிக்கை 28இல் இருந்து 31ஆக  உயர்வு கண்டிருக்கிறது. அதேபோல் துணை அமைச்சர்களின் எண்ணிக்கை 27இல் இருந்து 29ஆக அதிகரித்திருக்கிறது. மொத்தத்தில் அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் எண்ணிக்கை 55இல் இருந்து 60ஆக உயர்வு கண்டிருக்கிறது.

இந்த 31 முழு அமைச்சர்களில் தமிழ் பேசக்கூடிய ஒரு தமிழர்கூட முழு அமைச்சராக நியமனம் செய்யப்படவில்லை என்பது இந்திய சமுதாயத்திற்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய ஏமாற்றமும் அடியும் ஆகும். ஏற்கெனவே பினாங்கு துணை முதலமைச்சர் பதவியை இழந்தோம். கல்வி துணை அமைச்சர் பதவியையும் இழந்தோம். இப்போது மனிதவள அமைச்சர் பதவியையும் இழந்திருக்கிறோம். இன்னும் எதையெல்லாம் இழக்கப் போகிறோம் என்பது இறைவனுக்கே வெளிச்சம். ஒற்றுமை அரசாங்கத்தில் முழு அமைச்சராக நியமனம் செய்யப்படுவதற்கு தமிழ் பேசும் ஒரு தமிழருக்குக்கூடவா தகுதி இல்லை? என்ற கேள்வி இப்போது மூலை முடுக்குகளில் எல்லாம் ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது.

மலேசிய இந்திய சமுதாயத்தைப் பொறுத்தவரை நாட்டின் சுதந்திரத்திற்குப் பின்னர் தமிழ் பேசக்கூடிய ஒரு தமிழர் இடம்பெறாத முதலாவது அமைச்சரவையாக இருக்கிறது. சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள்  அனைத்தும் கனவாகவும் கானல் நீராகவும் மாறி விட்டது. அன்வாருக்கு வாக்களித்தால் அவர் இந்நாட்டின் பிரதமராக வந்தால் இந்திய சமுதாயத்தின் நிலை உயரும், வாழ்க்கை அந்தஸ்து உயரும், நிறைவான வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த இந்திய சமுதாயம் இப்போது மிகப்பெரிய ஏமாற்றத்தில் நிலைகுலைந்து போயிருக்கிறது.

இந்திய சமுதாயம் சற்றும் எதிர்பார்க்காத ஓர் அமைச்சரவை மாற்றம் இது. நம்பிக்கைகள் அனைத்தும் தகர்ந்து அவநம்பிக்கை தலைதூக்கி இருக்கிறது. அன்வார் அறிவித்த இந்த அமைச்சரவை மாற்றமானது ஒற்றுமை அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள 18 கட்சிகளையும் திருப்ப்திபடுத்தி 5 ஆண்டுகால தவனையை நிறைவு செய்திட வேண்டும் என்ற தூரநோக்குச் சிந்தனையைத்தான் பிரதிபலிக்கிறது.

டாமன்சாரா ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ இலக்கவியல் துறை புதிய அமைச்சராக இந்த அமைச்சரவை மாற்றத்தில் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தில் இதே பதவியைத்தான் அவர் ஏற்றிருந்தர். அப்போது இவரையும் சேர்த்து 4 இந்திய அமைச்சர்கள் என்று ஊடகங்களில் குறிப்பிட்டபோது நான் இந்தியர் அல்லர் சீக்கியர் என்பதை பட்டவர்த்தனமாக கூறியவர்.

அவரின் இந்தக் கருத்தின் அடிப்படையில் அன்வாரின் புதிய அமைச்சரவையில் ஓர் இந்தியார்கூட முழு அமைச்சர் பதவியில் நியமனம் செய்யப்படவில்லை என்பது இந்திய சமுதாயத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய ஓர் அடி என்று சமுதாய மக்கள் இப்போது விமர்சிக்கத் தொடங்கி இருக்கின்றனர். இந்த அமைச்சரவை மாற்றத்தில் அம்னோவின் கை ஓங்கி இருக்கிறது. அதில் இடம்பெற்றிருக்கும் பாரிசான் நேஷனலின் உறுப்புக் கட்சிகளான மஇகா, மசீச ஆகிய இரண்டும் கழற்றி விடப்பட்டுள்ளன.

பி.ஆர். ராஜன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here