பெட்டாலிங் ஜெயா:
இஸ்ரேலில் செயல்பட்டு வரும் கப்பல் சரக்கு நிறுவனமான ‘ZIM இன்டெகிரேடட் ஷிப்பிங் செர்விசஸ்’, இஸ்ரேலுக்குத் திரும்பும் கப்பல்கள், அல்லது இஸ்ரேல் நாட்டுக் கொடியைத் தாங்கிய கப்பல்கள் என யாவும் மலேசியத் துறைமுகங்களில் நிறுத்துவதற்கு உடனடித் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய அனைத்துலகச் சரக்குப் போக்குவரத்து நிறுவனமானது ZIM. அதன் கப்பல்கள் 2002ஆம் ஆண்டு முதல் மலேசியாவில் நிறுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டு வந்தது.
“இருப்பினும் தற்போதைய அரசாங்கம் முன்னாள் அரசாங்கம் எடுத்திருந்த முடிவை ரத்து செய்யத் தீர்மானித்துள்ளது,” என்று பிரதமரன டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
மேலும் போக்குவரத்து அமைச்சு இந்த நிறுவனத்திற்கு எதிராக நிரந்தரத் தடை விதிப்பதற்கான செயற்பாடுகளைச் செய்யும் என்று அவர் மேலும் கூறினார்.
அனைத்துலக சட்டங்களை மீறி, மனிதாபிமானத்தின் அடிப்படைக் கொள்கைகளைப் புறந்தள்ளி, பாலஸ்தீனர்களுக்கு எதிராகத் தொடர்ந்து தீங்கு இழைக்கும் இஸ்ரேலுக்கு எதிரானது இந்த முடிவு என்று அவர் விளக்கினார்.
இதனால் மலேசிய வர்த்தகத் துறை எவ்விதப் பாதிப்பும் அடையாது என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.