கோலாலம்பூர்:
செலாயாங் ஜெயாவில் இன்று அதிகாலை போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் ரந்தாவ் ஃபீஸ்டா கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படுகிறது என்றும், இவர்கள் ஆறு மாநிலங்களில் 50க்கும் மேற்பட்ட கொள்ளை மற்றும் வழிப்பறிச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் நம்பப்படுகிறது என்று சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசைன் உமர் கான் தெரிவித்தார்.
30 வயதுக்குட்பட்ட மூன்று ரோஹிங்கியா (மியன்மார் நாட்டவர்கள்) குற்றவாளிகளும் 2011 ஆம் ஆண்டு முதல் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்றும், அவர்களில் ஒருவர், குறித்த கும்பலின் தலைவரென நம்பப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு 2017 ஆம் ஆண்டு விடுதலையானார். அதன்பிறகு மீண்டும் பழைய குற்றச்செயல்களை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது என்று ஹுசைன் கூறினார்.
“நள்ளிரவுக்குப் பிறகு நடந்த இந்தச் சம்பவத்தில், செலாயாங் ஜெயாவில் சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்த ஃபோர்டு ஃபீஸ்டா காரைக் கண்டறிந்த போலீசார், வாகனத்தை நிறுத்தினர்.
“இருப்பினும், போலீசார் சோதனை நடத்த விரும்பியபோது, சந்தேக நபர்களில் இருவர், போலீசாரை நோக்கி மூன்று முறை துப்பாக்கியால் சுட்டதால், போலீசார் திருப்பிச் சுட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. போலீசார் 7 முறை துப்பாக்கியால் சுட்டதில் சந்தேகத்தின் பேர்வழிகள் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்,” என்று கோம்பாக் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
அப்போது போலீசார் அவர்களின் காரை சோதனையிட்டதில் இரண்டு ரிவால்வர் ரக கைத்துப்பாக்கிகள் மற்றும் ஒரு கத்தியை கண்டுபிடித்தனர்.
சந்தேக நபர்கள் சிலாங்கூர் தவிர, மலாக்கா, நெகிரி செம்பிலான், கோலாலம்பூர், பகாங் மற்றும் பினாங்கு ஆகிய இடங்களில் கொள்ளை மற்றும் வீடு உடைப்புகளில் ஈடுபட்டுள்ளதாக நம்பப்படுகிறது என்றார்.