பெனாம்பாங்:
இன்று அதிகாலை இங்குள்ள செக்கோலா மெனெங்கா கெபாங்சான் (SMK) பஹாங்கின் முன்னிலையில் வெளிநாட்டவர் ஒருவர் பாராங்கத்தி தாக்குதலுக்குள்ளாகி இறந்து கிடக்க கண்டெடுக்கப்பட்டார்.
29 வயதான பாதிக்கப்பட்டவர் கழுத்து, தலை, கை மற்றும் கால்களில் வெட்டுக் காயங்களுடன் கிடந்ததை பொதுமக்கள் கண்டனர்.
அதிகாலை 4.44 மணியளவில் கத்தி போன்ற ஆயுதம் ஏந்திய பலர் கைகலப்பில் ஈடுபட்டதாக காவல்துறைக்கு புகார் வந்தது என்று, பெனாம்பாங் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் சாமி நியூட்டன் கூறினார்.
“முதற்கட்ட விசாரணையில் வெளிநாட்டவர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாகவும், உடலில் பல வெட்டுக் காயங்கள், மற்றும் கத்தியால் குத்தப்பட்ட காயங்களும் இருப்பதும் கண்டறியப்பட்டது.
“பாதிக்கப்பட்டவர் இறந்துவிட்டதாக ராணி எலிசபெத் I மருத்துவமனை மருத்துவர்களால் உறுதிப்படுத்தப்பட்டது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
கொலைக்கான தண்டனைச் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டதாக சாமி கூறினார். மேலும் சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் விசாரணைக்கு உதவும் பொருட்டு, முன் வந்து தகவல்களை வழங்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.