அம்பாங்: பராமரிப்பில் இருந்த நான்கு வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாங் ஜெயா காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் முகமட் அஸாம் இஸ்மாயில் துஷ்பிரயோகம் குறித்து சிறுமியின் தந்தையிடமிருந்து புகார் கிடைத்ததாக கூறினார்.
சமையலராக பணிபுரியும் நபர் டிசம்பர் 17 அன்று தனது மகளை குழந்தை பராமரிப்பாளரின் வீட்டிலிருந்து அழைத்துச் சென்றபோது, அவர் உடலில் காயங்கள் இருப்பதாகக் கூறி புகார் அளித்தார். அவர் சிறுமியை அம்பாங் மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். அங்குள்ள மருத்துவ அதிகாரி சிறுமியின் முதுகு, முகம், முழங்கால்கள் மற்றும் பாதங்களில் பழைய மற்றும் புதிய காயங்கள் இருப்பதை உறுதிப்படுத்தினார் என்று அவர் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 7) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த வழக்கு தொடர்பாக ஜனவரி 4 ஆம் தேதி இரவு 10 மணியளவில் ஜாலான் இண்டா, தாமான் அம்பாங் இண்டா என்ற இடத்தில் 39 வயதான பெண்ணை போலீசார் கைது செய்தனர். அந்தப் பெண்ணிடம் குற்ற முன் பதிவு எதுவும் இல்லை என்பதும், மேலதிக விசாரணைகளுக்கு உதவுவதற்காக ஏழு நாட்கள் காவலில் வைக்கப்பட்டிருப்பதும் சோதனையில் தெரியவந்தது.
குழந்தைகள் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்கை நாங்கள் குழந்தைகள் சட்டம் 2001 இன் பிரிவு 31 (1) (a) இன் கீழ் விசாரித்து வருகிறோம் என்று அவர் கூறினார். குழந்தைகள் மீது துஷ்பிரயோகம் செய்யக்கூடாது என ஏசிபி முகமது அஸாம் பொதுமக்களை எச்சரித்தார். வேண்டுமென்றே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம் என்றார் அவர்.