பிரபல ‘குவேக்கர் ஓட்ஸ் கம்பெனி’ அதன் உணவுப் பொருள்களை சந்தையிலிருந்து மீட்டு வரும் நிலையில் மேலும் அதிகமான தயாரிப்புக்களை அந்தப் பட்டியலில் கடந்த சில நாட்களில் சேர்த்துக்கொண்டுள்ளது.
‘சால்மனெல்லா’ எனும் ஒருவகை பாக்டீரியா பாதித்தால் மாசுபாடு ஏற்பட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் நிறுவனம் இதுவரை 60க்கும் மேற்பட்ட உணவுப்பொருள்களை உலக சந்தைகளிலிருந்து மீட்டுக்கொண்டது.
‘பெப்சிகோ’வின் கீழ் இயங்கிவரும் ‘குவேக்கர் ஓட்ஸ்’ தொடக்கத்தில் 43 உணவுப்பொருள்களை மீட்டுக்கொண்டது. பின்னர், ஜனவரி 11ஆம் தேதியன்று மேலும் 24 உணவுப்பொருள்களைப் பட்டியலில் சேர்த்துக்கொண்டது.
இருப்பினும் மீட்டுக்கொண்ட உணவுப்பொருள்களால் நோய்வாய்ப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் புகார்கள் ஏதும் குவேக்கருக்குக் கிடைக்கவில்லை என்று அமெரிக்க உணவு, மருந்து நிர்வாகம் முன்னதாகக் கூறியது. அத்தோடு தமது தயாரிப்புகளுடன் தொடர்பான பிரச்சனைகள் ஏதேனும் நிகழ்ந்ததா என்பது குறித்துத் தகவல் இல்லை என்றும் அது தெரிவித்துள்ளது.
இளம் பிள்ளைகள், எளிதில் உடல் பாதிக்கப்படும் நிலையில் உள்ள பெரியவர்கள், உடலில் எதிர்ப்புசக்தி குறைவாக உள்ளவர்கள் போன்றோரை ‘சால்மனெல்லா’ எனும் ஒருவகை பாக்டீரியா பாதித்தால், அது உயிருக்கே ஆபத்தாகிவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது .