ஜோகூர் பாரு:
ஜோகூர், மாசாய் நகரில் உள்ள நான்கு உடம்பு பிடி நிலையங்களில் ஜோகூர் குடிநுழைவுத் துறையின் அமலாக்க அதிகாரிகள் நேற்று நடத்திய சோதனையில், மொத்தம் 24 வெளிநாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
மாலை 5.30 மணியளவில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டுப் பெண்கள் அனைவரும் 21 வயதுக்கும் 42 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்று அதன் இயக்குநர் பஹாருதீன் தாஹிர் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையில், மசாஜ் தெரபிஸ்டாக பணிபுரிவதாக சந்தேகிக்கப்படும் அனைத்து வெளிநாட்டு பெண்களும் சமூக விசிட் பாஸ் மற்றும் தற்காலிக பணி வருகை பாஸ் ஆகியவற்றை தவறாக பயன்படுத்தியது கண்டறியப்பட்டது என்றார்.
“கைது செய்யப்பட்டவர்களில் 17 வியட்நாம் பெண்கள், 4இந்தோனேசிய பெண்கள் மற்றும் 2 தாய்லாந்து பெண்கள்” ஆகியோர் அடங்குவதாக இன்று நடந்த கூட்டத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரும் குடிநுழைவுச் சட்டம் 1959/63 (சட்டம் 155) பிரிவு 6(1)(c) மற்றும் பிரிவு 15(1)(c) ஆகியவற்றின் கீழ் அதிக காலம் தங்கியதற்காக குற்றங்களைச் செய்ததாகவும், குடிவரவு விதிமுறைகள் 1963 இன் விதிமுறை 39(b) இன் கீழ் அவர்கள் விசாவின் நிபந்தனைகளை மீறும் குற்றத்தையும் செய்துள்ளனர் என்றும் பஹாருதீன் கூறினார்.
“சரியான ஆவணங்கள் மற்றும் பணி அனுமதி இல்லாமல் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும் முதலாளிகள் மற்றும் வளாக உரிமையாளர்கள் மீது சமரசம் இல்லாமல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அவர் மேலும் கூறினார்.