65 உக்ரைன் கைதிகளுடன் விழுந்து நொறுங்கிய ரஷ்ய இராணுவ விமானம்!

உக்ரைனின் 65 போர்க் கைதிகளை ஏற்றிச் சென்ற ரஷ்ய ராணுவ விமானம் பெல்கோரோடில் விழுந்து நொறுங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெல்கோரோடில் விழுந்து நொறுங்கிய ரஷ்ய ராணுவ விமானம்
பெல்கோரோடில் விழுந்து நொறுங்கிய ரஷ்ய ராணுவ விமானம்
ரஷ்யாவில் உள்ள பெல்கோரோட் பிராந்தியத்தின் கொரோசான்ஸ்கி மாவட்டத்தில் உக்ரைனின் 65 போர்க் கைதிகளுடன் சென்ற ரஷ்யாவின் ராணுவ விமானம் இன்று விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த மீட்புப்படையினர் விரைந்து சென்றுள்ளனர்.

இந்த நிலையில், உக்ரைனில் உள்ள உள்ளூர் ஊடகங்களை மேற்கோள்காட்டி ஏவுகணைகளை எடுத்துச் சென்றதால், ரஷ்யா ராணுவ விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. போர்க் கைதிகளை ஏற்றிச் சென்ற விமானத்தை கிய்வ் சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யாவின் நாடாளுமன்ற சபாநாயகர் வியாசஸ்லாவ் வோலோடின் குற்றம் சாட்டியுள்ளார்.

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் கூற்றுப்படி, பெல்கோரோட் பகுதியில் விபத்துக்குள்ளான விமானத்தில் 65 உக்ரைன் போர்க் கைதிகள் இருந்துள்ளனர். அவர்களைத் தவிர, விமானத்தில் ஆறு பணியாளர்கள் மற்றும் மூன்று காவலர்கள் இருந்துள்ளனர். உக்ரைன் எல்லையை ஒட்டியுள்ள ரஷ்யாவின் மேற்கு பெல்கோரோட் பகுதியில் ராணுவ போக்குவரத்து விமானம் விபத்துக்குள்ளானதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விபத்திற்குப் பிறகு வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், கைப்பற்றப்பட்ட 65 உக்ரேனிய ராணுவ வீரர்கள் பரிமாற்றத்திற்காக பெல்கொரோடிற்கு கொண்டு செல்லப்படுவதாகக் கூறியுள்ளது.

இந்த நிலையில் எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட வீடியோவில், ரஷ்ய ராணுவ விமானம் கட்டுப்பாட்டை இழந்து கடுமையாக கீழே விழும் முன் தரைக்கு மிக அருகில் பறக்கிறது. இதன் பின். விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து பலத்த விபத்து சத்தம் கேட்கிறது. அடர்த்தியான தீ வெடிப்பு ஏற்படுகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்து விட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here