“மர்ம மரணம்!” சட்டென சரிந்த நவல்னி.. உயிரிழக்கும் முன் ரஷ்ய சிறையில் என்ன தான் நடந்தது?

மாஸ்கோ: ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி சிறையிலேயே மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அவர் உயிரிழந்தது குறித்த பரபர தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. ரஷ்யாவில் முக்கிய எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர் அலெக்ஸி நவல்னி பல்வேறு குற்றச்சாட்டுகளில் இவர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இதற்கிடையே நேற்று வெள்ளிக்கிழமை இவர் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென சிறையிலேயே மர்மமான முறையில் உயிரிழந்தார்.

ரஷ்யாவின் மிகவும் செல்வாக்கு மிக்க எதிர்க்கட்சி தலைவராக இருந்த நவல்னி, தொடர்ச்சியாக புதினை கடுமையாக விமர்சித்து வந்தார். புதின் செல்வம் அவரது ஆடம்பர வாழ்க்கையை நக்கலடிக்கும் வகையில் அவர் வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார். பல மாதங்கள் சிறையில் இருந்த அவர், கடைசியாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜரான சமயத்திலும் அவரது நகைச்சுவை உணர்வு அவரை விட்டுச் செல்லவில்லை.

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜரான நவல்னி, “யுவர் ஹானர், நான் உங்களுக்கு எனது தனிப்பட்ட வங்கிக் கணக்கு தகவல்களை அனுப்புகிறேன்.. நீதிபதியாக உங்களுக்கு வரும் பெரும் சம்பளத்தையும் எனது வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தையும் கொஞ்சம் பாருங்கள்.. ஏனென்றால் விசாரணை நீண்டு கொண்டு போவதால் எனது செல்வம் காலியாகி வருகிறது” என்றார்.

நவல்னியிடம் இருந்த பேனாவைப் பறிமுதல் செய்யச் சிறை அதிகாரி முயன்ற நிலையில், அது தொடர்பாக இந்த விசாரணை நடந்துள்ளது. சிறை அதிகாரியிடம் நவல்னி வாக்குவாதம் செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடந்த நிலையில், நவல்னிக்கு 15 நாட்கள் தனிமை சிறை விதிக்கப்பட்டு இருந்தது. கடந்த 2021 முதல் சிறையில் இருந்து வரும் நவல்னி அவ்வப்போது சிறை விதிகளை மீறுவதால் தனிமை சிறையில் அடைக்கப்பட்டு வந்துள்ளார்.

கடந்த 2 மாதங்களில் 4 ஆவது முறையாக அவர் இதுபோல தனிமை சிறையில் அடைக்கப்பட்டார். இதுவும் கூட அவரது மரணத்தில் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அவர் தனிமை சிறையில் இருந்த போது அவருக்கு ஏதாவது நடந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். அவரை கொல்ல ஏற்கனவே கடந்த 2020இல் முயற்சி நடந்த நிலையில், அதில் இருந்து அவர் தப்பினார். எனவே, அதையும் சிலர் இப்போது சந்தேகிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here