உலகின் மிக உயரமான ஆண் – மிக குள்ளமான பெண்; 6 ஆண்டுகளுக்குப் பின்னர் சந்திப்பு

உலகின் மிக உயரமான ஆணும், மிகவும் குள்ளமான பெண்ணும் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவின் இர்வினில் நேரடியாக சந்தித்து அளவளாவி இருக்கின்றனர்.

உலகின் மிகவும் உயரமான ஆணாக அறியப்படுபவர் சுல்தான் கோசன். அதே போன்று உலகின் மிகவும் குள்ளமான பெண்ணாக அறியப்படுகிறார் ஜோதி ஆம்கே. இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் நேரடியாக சந்தித்து மகிழ்ச்சி பரிமாறி உள்ளனர்.

மேலும், புகைப்படங்களுக்காக அணுகிய கேமராக்களுக்கு இருவரும் அலுக்காது போஸ் தந்துள்ளனர். இருவருக்கும் இது முதல் சந்திப்பல்ல. 6 ஆண்டுகளுக்கு முன்னர் எகிப்தில் இதே போன்று போட்டோ ஷூட் சந்திப்பில் இருவரும் ஒன்றாக பங்கேற்றுள்ளனர். எகிப்து பிரமிடுகள் முன்பாக இருவரும் தோன்றும் புகைப்படங்கள் இன்றளவும் பகிரப்பட்டு வருகின்றன.

கின்னஸ் உலகச் சாதனை ஆவணங்களின்படி, இருவருக்கும் இடையே ஆறடிக்கும் அதிகமான உயர வித்தியாசம் உள்ளது.

2009-ம் ஆண்டில், கோசென் 8 அடி 3 அங்குல உயரம் கொண்ட உலகின் மிக உயரமான மனிதராக சாதனை படைத்தார். அதே ஆண்டு, ஆம்கேக்கு உலகின் ‘உயரம் குறைந்த பதின்ம வயதுப் பெண்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது. அப்போது 15 வயதான ஆம்கே உயரம் 2 அடி 0.3 அங்குலமாக இருந்தது. அடுத்ததாக ஆம்கேக்கு 18 வயதாகும்போது, மீண்டும் அளவிடப்பட்டபோது அவரது உயரம் 2 அடி 0.7 அங்குலம் என்பதாக இருந்தது. இதன் மூலம் ஆம்கே உலகின் உயரம் குறைந்த பெண் என்ற சாதனையை படைத்தார்.

ஆம்கேயின் உயரக் குறைவுக்கு அவரை பீடித்த அகோன்ட்ரோபிளாசியா என்ற, குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் வளர வாய்ப்பில்லாத குறைபாடு காரணமாகும். மறுபுறம், கோசனின் சாதனை உயரத்துக்கு அவரது பிட்யூட்டரி சுரப்பி காரணமாக நேர்ந்த ஜிகாண்டிஸம் பாதிப்பு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here