“கலைக்கும் காதலுக்கும் நன்றி” மும்பை விழாவில் தமிழில் பேசி அசத்திய நயன்தாரா

கலைக்கும் காதலுக்கும் நன்றி என நடிகை நயன்தாரா தமிழில் பேசி அசத்தியுள்ள வீடியோவைத் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சினிமா மட்டுமல்லாது தற்போது பிசினஸிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார் நடிகை நயன்தாரா. இதற்கெல்லாம் காரணம் தனது கணவர் விக்னேஷ் சிவன் கொடுத்த ஊக்கம்தான் என ஒவ்வொரு மேடையிலும் அவர் மீதான காதலை வெளிப்படுத்த நயன்தாரா தவறுவதில்லை. அப்படி இருக்கையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பையில் 2024ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ’ஜவான்’ படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகைக்கான விருதை நடிகை நயன்தாரா பெற்றார். இந்த விருதை அப்படத்தில் நடித்த நடிகர் ஷாருக்கான் அவருக்கு வழங்கினார். ’ஜவான்’ படத்திற்காக நடிகர் ஷாருக்கான், சிறந்த இசையமைப்பாளராக அனிருத் மற்றும் கிரிடிக்ஸ் விருதை இயக்குநர் அட்லியும் பெற்றனர்.

இந்த நிலையில், மும்பையில் நடந்த இந்த விருது விழா மேடையில் தமிழில் பேசி அசத்தியுள்ளார் நயன்தாரா. வாய்ப்புக் கொடுத்து மரியாதையாக நடத்தியாகச் சொல்லி ஷாருக்கானுக்கு நன்றி சொல்லியுள்ளார்.

மேலும், பாலிவுட்டில் ஆதரவு கொடுத்த அனைவருக்கும் இந்தியில் நன்றி தெரிவித்த நயன்தாரா தனது குடும்பத்தையும் குறிப்பிட்டுப் பேசியுள்ளார். பின்பு தமிழில், ‘என்றும் என்னுடன் இருக்கும் உறவுக்கும் உலகுக்கும் உயிருக்கும், என்னோட எல்லாமுமான விக்கிக்கும் ஆயிரம் கோடி நன்றிகள். கலைக்கும் காதலுக்கும் நன்றி! அன்புக்கும் ஆண்டவனுக்கும் நன்றி” என பேசியுள்ளார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here