செ. குணாளன்
மாக் மண்டின், பிப். 23-
அண்மையில் நடந்து முடிந்த தேசிய அளவில் தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான ஹாக்கி போட்டியில் பெருமைக்குரிய வெற்றியைக் குவித்த பினாங்கு மாநில ஹாக்கி குழுவினருக்கு மாக் மண்டின் தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியர் என்.எஸ்.குணா வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். இவை யாவும் பள்ளி வரலாற்றுச் சுவடுகளில் இடம்பெற வேண்டிய வெற்றிப் பதிவுகள்.
இம்மாபெரும் வெற்றியை அடைய பெருமளவில் ஊக்கமும் ஆதரவும் வழங்கிய பிறை சட்டமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜு, அனுமதி வழங்கிய பினாங்கு மாநில கல்வி இலாகாவின் தமிழ்ப்பள்ளிகளின் உதவி இயக்குநர் அ.சக்திவேல், மாணவர் திறன், ஆளுமை பகுதி அதிகாரி தி. மனுநீதி ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி, புக்கிட் மெர்தாஜம் தமிழ்ப்பள்ளி, பழனியாண்டி தமிழ்ப்பள்ளி ஆகிய மூன்று பள்ளிகள் இணைந்து இரு மாணவக் குழுவினரைஉருவாக்கினர். அவ்வகையில் இக்குழுவின் வெற்றிக்கு முதுகெலும்பாய் இருந்த பயிற்றுநர்கள் அ. அர்வின், சே. வெங்கடேஷுக்கும் நன்றிகளும் பாராட்டுகளும் உரித்தாகட்டும்.
மாணவர்களின் கடுமையான முயற்சி, பயிற்றுநர்களின் அயராத உழைப்பு, பெற்றோரின் முழுமையான பங்கு, தலைமை ஆசிரியர்கள் ந.குணசேகரன், திருமதி நா. புஸ்பவதி திருமதி கு. வசந்தி ஆகியோரின் வற்றாத ஆதரவு, பெற்றோர் – ஆசிரியர் சங்கத் தலைவர்கள் த. புவனேஸ்வரன், ஆ. ஜெயராமன், அ.ஷென் எவன் டேவிட், தயாளன், சாந்தகுமார், ஆசிரியர் விஜயன் ஆகியோரின் இடைவிடாத உதவி, ஆதரவாளர்களின் நம்பிக்கை இவை அனைத்தும் வெற்றியைத் தேடித் தரும் என்று அவர் குறிப்பிட்டார்.