அழியும் நிலையில் பென்குயின்கள்

அண்டார்டிகா: உலகின் மிகப்பெரிய குளிர் பாலைவனமாக இருக்கும் அண்டார்டிகாவில் முதன் முறையாக பறவை காய்ச்சல் நோய்க்கான வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இது பென்குயின்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.

பூமியின் சிறப்பு வாய்ந்த பகுதிகளில் அண்டார்டிகா மிக முக்கியமானதாகும். ஆனால் மனிதர்கள் இதை மிகவும் தாமதமாகத்தான் கண்டுபிடித்தனர். அதாவது, சூரிய குடும்பத்தில் மொத்தமுள்ள 8 கோள்களில், 7 கோள்களை கண்டுபிடித்துவிட்ட பிறகு, பொறுமையாகதான் அண்டார்டிகா கண்டுபிடிக்கப்பட்டது. இப்படி இருக்கையில், இந்த பகுதியில் பறவை காய்ச்சல் நோய்க்கான வைரஸ் பரவியுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

அண்டார்டிகாவில் குளிர் மைனஸ் 10 டிகிரி செல்சியஸிலிருந்து, மைனஸ் 60 வரை இருக்கும். எனவே மனிதர்கள் உயிர் வாழ்வது கடினம். மனிதன் மட்டுமல்ல கோழி, புறா என வேறு எந்த பொதுவான பறவைகளும் இங்கு வாழாது. அண்டார்டிகாவுக்கு சுற்றுலா வருபவர்கள் தங்களுடன் எந்த செல்ல பிராணிகளையும் அழைத்து வரக்கூடாது என்று கட்டுப்பாடு இருக்கிறது. இவையெல்லாம் கடந்து இங்கு எப்படி பறவை காய்ச்சல் வைரஸ் வந்திருக்கும்? என விஞ்ஞானிகள் ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர்.

ஓரிரு நாட்களுக்கு முன்னர் அண்டார்டிகாவில் அமைந்துள்ள அர்ஜெண்டினா நாட்டின் ஆய்வகத்திற்கு அருகே இரண்டு ஸ்குவா பறவைகள் இறந்து கிடந்துள்ளன. கடற்காகங்கள் என்றும் அழைக்கப்படும் இந்த பறவைகளின் சடலத்தில் எந்த காயமும் இல்லை. காயங்கள் இல்லாமல் இந்த பறவைகள் எப்படி உயிரிழந்தன என்பது குறித்த ஆய்வை விஞ்ஞானிகள் தொடங்கினர். இந்த ஆய்வில்தான் இப்பறவைகளுக்கு H5N1 ஏவியன் எனும் பறவைக் காய்ச்சல் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. வைரஸ் பாதிப்பால்தான் ஸ்குவா பறவைகள் உயிரிழந்திருப்பது உறுதியும் செய்யப்பட்டது.

இது ஸ்குவா பறவைகளோடு நிற்காமல் பென்குயின்களுக்கு பரவினால் கடும் மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். உலகின் வேறு எந்த பகுதிகளிலும் பென்குயின் கிடையாது. அண்டார்டிகாதான் பென்குயினின் வீடு. அதேபோல வேறு சில பறவைகளுக்கும் இதுதான் பூர்வீகமாக இருக்கிறது.

மட்டுமல்லாது இங்கு உள்ள பென்குயின்கள் இதற்கு முன்னர் பறவை காய்ச்சல் நோயை எதிர்கொண்டது கிடையாது என்பதால், இதன் நோயெதிர்ப்பு திறன் குறைவாகவே இருக்கும். இப்படி இருக்கையில் பறவை காய்ச்சல் பரவ தொடங்கினால் இவை அனைத்தும் ஒரேயடியாக அழிந்துவிடும் என்றும் எச்சரித்துள்ளனர். ஏற்கெனவே புவி வெப்பமடைவதால், குறிப்பிட்ட வகை பென்குயின்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. இந்நிலையில், பறவை காய்ச்சல் வைரஸ் புதிய பீதியை கிளப்பியுள்ளது.

கடந்த மாதம், அண்டார்டிக்காவையொட்டிய பால்க்லாந்து தீவுகளின் கடற்கரையில் சுமார் 200 பென்குயின்கள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியிருந்தன. ஆனால், இது பெரிய அச்சுறுத்தலாக அப்போதைக்கு தெரியவில்லை. ஆனால் ஸ்குவா பறவைகளின் உயிரிழப்பு அச்சுறுத்தலின் தீவிர தன்மையை அதிகரித்திருக்கிறது.

கடந்த 2022ம் ஆண்டில் மட்டும் சுமார் 5 லட்சம் வெவ்வேறு இனத்தை சேர்ந்த பறவைகளை H5N1 ஏவியன் பறவை காய்ச்சல் வைரஸ் பலி கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here