கிள்ளான்:
இங்குள்ள தாமான் செந்தோசா பகுதியின் பிரதான சாலையாக விளங்கும் ஜாலான் சுங்கை ஜாத்தியிலிருந்து லக்சமனா 5 சாலைக்குள் வளைந்து நுழையும் வாகனமோட்டிகள் பேராபத்தை எதிர்நோக்கும் சூழ்நிலை உள்ளதாக அங்குள்ள பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
சம்பந்தப்பட்ட லக்சமனா 5 சாலையை ஒட்டி அமைந்துள்ள அகண்ட கால்வாய்க்கும் அச்சாலைக்கும் இருக்கும் இடைவெளி மிகவும் குறுகலாக உள்ளதுடன் தடுப்புச் சுவர் எதுவும் அமைக்கப்படாத நிலையில் அங்கு வளைந்து செல்லும் வாகனமோட்டிகள் அக் கால்வாய்க்குள் விழுந்து விடும் பேராபத்தை எதிர்நோக்கியிருப்பதாக அச்சாலையை ஒட்டி இயங்கி வரும் சக்தி உணவக உரிமையாளர்களான செல்வம், திலகன் ஆகிய இருவரும் அண்மையில் அது குறித்து அவ்வட்டார எம்பிடிகே கவுன்சிலரான தங்கராஜாவிடம் புகார் தெரிவித்தனர்.
சம்பந்தப்பட்ட அகண்ட கால்வாயை ஒட்டியுள்ள வளைவுச் சாலையில் தடுப்பு அடையாளங்கள் எதுவும் பொருத்தப்படாததால் பல முறை கார், லோரி போன்றவை தட்டுத் தடுமாறி அக்கால்வாய்க்குள் விழுந்து சிக்குண்ட சம்பவங்களும் நடந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இது போன்ற சம்பவங்கள் பொதுமக்களிடையே அச்சத்தையும் பயத்தையும் உருவாக்கி வருவதால் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும், என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
இவ்விவகாரம் தொடர்பில் வாகனமோட்டிகளின் பாதுகாப்பு நலன் கருதி் தேவையான மேம்பாட்டு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கிள்ளான் மாவட்டப் பொதுப்பணி இலாகா பொறுப்பாளரான ஹகிமி ஹமிட் என்பவரிடம் திட்டம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தங்கராஜா செய்தியாளர்களிடம் கூறினார்.
மேலும், விபத்து ஏற்படுவதைத் தடுக்கும் உடனடி தற்காலிக நடவடிக்கையாக சம்பந்தப்பட்ட கால்வாய் ஓரங்களில் தடுப்புக் கற்களைப் பொருத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.