தொழிலாளர்களிடையே நீரிழிவு நோய் 10 விழுக்காடு அதிகரிப்பு- அமைச்சர் ஸ்டீவன் சிம் கவலை

செ. குணாளன்

பாயான் லெப்பாஸ்:

நாட்டில் தொழிலாளர்களிடையே நீரிழிவு நோயாளிகள் 10 விழுக்காடு அதிகரித்திருப்பது கவலை அளிக்கிறது என்று பினாங்கு ஜாபில் நிறுவனத்தில் பெர்கேசோ எனப்படும் சமூக பாதுகாப்பு அமைப்பின் ‘சீனியைத் தவிர்ப்போம்’ என்னும் பிரச்சாரத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங் கவலை தெரிவித்தார்.

இதன் காரணமாக நீரிழிவு நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக பெர்கேசோ தனது செலவுத் தொகையை அதிகரிக்க வேண்டியிருந்தது. கடந்த பத்தாண்டுகளில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 10 விழுக்காடு அதிகரித்திருப்பது ஆரோக்கியமாக இல்லை என்று அவர் கூறினார்.

பெர்கேசோ மேற்கொண்ட சுகாதாரப் பரிசோதனைகளை மேற்கோள்காட்டி கடந்த ஆண்டு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை 19.9 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இது 2013இல் வெறும் 9 விழுக்காடாக இருந்தது என்று அவர் குறிப்பிட்டார்.

நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் வேலை இடங்களில் உற்பத்தித்திறனை பாதிக்கச் செய்கிறது.

எனவேதான் வலுவில்லா வாழ்க்கைத் தரத்திற்கு வழிவகுப்பதைத் தவிர்ப்பதற்கு நீரிழிவு நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பெர்கேசோ அதிக பணம் செலவழிக்க வேண்டியிருந்தது என்று அவர் மேலும் கூறினார்.

அமைச்சர் ஸ்டீவன் சிம்மின் தகவல்படி கடந்த ஆண்டு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கான சிகிச்சைக்காக 300 மில்லியன் ரிங்கிட்டிற்குமேல் செலவிடப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொழிலாளர்களிடையே அதிகரித்து வரும் நீரிழிவு நோயாளிகளின் விழுக்காட்டைக் குறைப்பதற்கான வழிகளை நாம் கண்டுபிடிக்க வேண்டும்.
அதனால்தான் பெர்கேசோ இப்போது நாடு தழுவிய நிலையில் இலவச சுகாதாரப் பரிசோதனை பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. அத்துடன் நல்ல உணவுப் பழக்கம் குறித்து தொழிலாளர்களுக்கு போதிக்க வேண்டியுள்ளது என்றும் அவர் பினாங்கு ஜாபில் கூட்டமைப்பு நிறுவன சமூக பொறுப்பு நடவடிக்கையைப் பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

2013ஆம் ஆண்டு முதல் 40, அதற்கு மேற்பட்ட வயதுடைய 800,000 தொழிலாளர் களைக் கண்காணித்து நீரிழிவு நோய் பற்றிய தகவல்களை சொக்சோ சேகரித்து வருவதாக ஸ்டீவன் சிம் சொன்னார்.

கடந்த ஆண்டு மட்டும் 175,000 பேரை சோதித்துள் ளனர். இந்தத் தொழிலாளர்களில் 59.9 விழுக் காட்டுப் பேருக்கு அதிக கொழுப்பு (கொலஸ்ட்ரால்) இருப்பதாகவும் 20.4 விழுக் காட்டுப் பேருக்கு உயர் ரத்த அழுத்தம் (உயர் ரத்த அழுத்தம்), 19.9 விழுக்காட்டுப் பேருக்கு நீரிழிவு நோய் இருப்பதாகவும் பெர்கேசோ அதிகாரிகள் கண்டறிந்தனர்.

பரிசோதிக்கப்பட்ட அனைத்து தொழிலாளர்களின் கால் பகுதியில் பருமன் என்று கருதப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒவ்வொரு மாநிலத்திலும் குறைந்தது ஒரு பெர்கேசோ டயாலிசிஸ் மையத்தை அமைக்க அமைச்சகம் 42 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கும் என்றார்.

ஏற்கெனவே சிலாங்கூர், ஜோகூரில் முறையே ஒன்று உள்ளது. முன்னதாக, பாயான் லெப்பாஸில் உள்ள ஜாபில் தொழிற்சாலையில் தொழிலாளர்களிடையே நீரிழிவு நோயைத் தடுக்க உதவும் சர்க்கரை இல்லாத பிரச்சாரத்தை ஸ்டீவன் சிம் தொடங்கி வைத்தார்.

இதனிடையே பினாங்கில் பிரபல தொழிற்சாலையான ஜாபில் பெர்கேசோ அமைப்பின் ‘சீனியைத் தவிர்ப்போம்’ என்ற பிரச்சாரத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கியதுடன் ஜாபில் வளாகத்தில் மருத்துவப் பரிசோதனை, வாகனமோட்டிகளுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்து காவல் துறையின் ஒத்துழைப்போடு பிரச்சாரம், மோட்டார் சைக்கிள்களுக்கு இலவசமாக எண்ணெய் மாற்றுவது என்றும் மேலும் பல தலைக்கவசம் பாதுகாப்பு பிரச்சாரம் என்று தனது கூட்டமைப்பு நிறுவன சமூகப் பொறுப்பு நடவடிக்கையை மேற்கொண்டது.

‘சீனியைத் தவிர்ப்போம்’ எனும் பிரச்சாரத்தைத் தொடக்கி வைக்க வருகை அளித்த மனிதவளத்துறை அமைச்சர் ஸ்டீவன் சிம் ஜாபில் நிறுவனத்தின் செயல் நடவடிக்கைகளையும் பார்வையிட் டார். மேலும் தொழிலாளர்களை அணுகி கைகுலுக்கினார். பினாங்கு முதலமைச்சரின் பிரதிநிதியாக மாநில இளைஞர், விளையாட்டுத் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் டேனியல் கூய் கலந்துகொண்டார். மேலும் பெர்கேசோ தலைமைச் செயல் அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் முகம்மட் அஸ்மான் அஸிஸ் முகம்மட் இந்நிகழ்ச்சியில் மனிதவள அமைச்சருடன் கலந்து கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here