சிங்கப்பூர் ஜோடியிடம் காவல்துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றது தொடர்பில் போலீஸ் விசாரணை ஆரம்பம்

ஜோகூர் பாரு:

சுல்தான் இஸ்கந்தர் குடிநுழைவு வளாகத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகள் தங்களிடம் வற்புறுத்தி 500 ரிங்கிட் லஞ்சம் பெற்றார்கள் என்று சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு ஜோடி புகார் சொன்னதை அடுத்து, அவர்களிடம் கூடுதல் விவரங்கள் பெற ஜோகூர் காவல்துறை குறித்த ஜோடிக்கு அழைப்பு விடுத்துள்ளது.

ஐரீன் தியோ எனும் ஃபேஸ்புக் பயனர், தாங்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதைத் தவிர்க்கும் விதத்தில் இரு போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளுக்கு அந்தத் தொகையை லஞ்சமாகக் கொடுத்ததாகத் தெரிவித்திருந்தார் என்று ஜோகூர் மாநில காவல்துறை ஆணையாளர் எம். குமார் கூறினார்.

“மார்ச் 10ஆம் தேதி இரவு 8.15 மணிக்கு, சோதனைச் சாவடி 8Aயில், ஜோகூர் பாருவிலிருந்து சிங்கப்பூருக்குச் செல்லும் லோரிகளுக்கான தடத்தில் தங்கள் கார் தவறுதலாக சென்றதற்காகவே அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படவிருந்தது என்றும், “இப்போது வரை அந்தச் சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து எவ்வித புகாரும் தங்களுக்குக் கிடைக்கவில்லை,” என்று ஆணையாளர் குமார் மார்ச் 14ஆம் தேதி தெரிவித்தார்.

விசாரணையில் உதவும் வகையில், ‘சேஞ்’ மற்றும் ‘ஐரீன் தியோ’ எனும் ஃபேஸ்புக் பயனர்களை அடையாளம் காணும்படி ஜோகூர் பாருவில் உள்ள சிங்கப்பூர் துணைத் தூதரகத்திடம் அதிகாரபூர்வமாக உதவி கேட்டுள்ளோம்,” என்றும் திரு குமார் விவரித்தார்.

குற்றவியல் தண்டனைப் பிரிவு 384ன் கீழ் லஞ்சம் வாங்கிய இந்தச் சம்பவம் விசாரிக்கப்பட்டு வருகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், பத்து ஆண்டு வரையிலான சிறை, அபராதம், பிரம்படி அல்லது இவற்றுள் ஏதாவது இரண்டு தண்டனையாக விதிக்கப்படலாம்.

மலேசிய காவல்துறையின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பகத்தன்மையைப் பலப்படுத்த தங்கள் அதிகாரிகளிடையே குற்றவியல் ஒழுங்கின்மையைத் தடுக்க ஜோகூர் காவல்துறை கடப்பாடு கொண்டுள்ளது என்று குறிப்பிட்ட ஆணையாளர் குமார், குற்றம் புரிந்ததாக சந்தேதிக்கப்படும் காவல்துறை அதிகாரிகள் கடுமையான தண்டனையை எதிர்நோக்குவர்,” என்றும் விளக்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here